பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டிய வடமாநில கொள்ளையர்கள் 2 பேர் கோவையில் கைது - திடுக்கிடும் தகவல்கள்


பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டிய வடமாநில கொள்ளையர்கள் 2 பேர் கோவையில் கைது - திடுக்கிடும் தகவல்கள்
x
தினத்தந்தி 3 Oct 2019 4:00 AM IST (Updated: 2 Oct 2019 11:22 PM IST)
t-max-icont-min-icon

பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டிய வடமாநில கொள்ளையர்கள் 2 பேரை கோவையில் போலீசார் கைது செய்தனர். அவர்கள் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை,

கோவை செட்டிவீதியை சேர்ந்தவர் முரளி (வயது 50). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு நகைபட்டறையில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

இவர், பட்டறையில் செய்யும் நகைகளை பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று கடைகளில் கொடுத்து வருவது வழக்கம். அதன்படி அவர் கடந்த ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி ஏராளமான நகையுடன் கர்நாடக மாநிலத்துக்கு சென்றார்.

அங்குள்ள கடைகளில் நகையை கொடுத்துவிட்டு கோவைக்கு தனியார் பஸ்சில் திரும்பினார்.

அவர் கோவை காந்திபுரம் பஸ்நிலையத்தில் இறங்கும்போது பையில் இருந்த ரூ.44 லட்சம் மதிப்பிலான நகையை காணவில்லை. இது குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அத்துடன் குற்றவாளிகளை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவின் பேரில், குற்றப்பிரிவு துணை கமிஷனர் பெருமாள் மேற்பார்வையில், உதவி கமிஷனர் சந்திரசேகர் தலைமையில் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, ஏட்டு உமா, போலீஸ்காரர்கள் கார்த்தி, பூபதி, சிந்தன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்களும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தனிப்படை போலீசார் கோவை காந்திபுரம் பஸ்நிலையத்தில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு நின்றிருந்த 2 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை செய்தனர்.

இதில் அவர்கள், உத்தரபிரதேச மாநிலம் பிஜினூர் மாவட்டத்தை சேர்ந்த சகில் அகமது (41), ரியா உசேன் (44) என்பதும், அவர்கள், ஆம்னி பஸ்களில் சென்று பயணிகளிடம் இருந்து நகை, பணத்தை திருடும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். சகில் அகமது, ரியா உசேன் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் கிடைத்தன. அதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

கோவையில் நகைப்பட்டறை ஊழியர் முரளியிடம் திருடப்பட்ட நகைக்கும், தற்போது கைதான சகில் அகமது, ரியா உசேன் ஆகியோருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவர்கள் 2 பேரின் மீது கோவை மாநகர பகுதியில் எந்த வழக்கும் இதுவரை பதிவு செய்யப் படவில்லை. தற்போதுதான் அவர்கள் கோவை வந்து உள்ளனர்.

இவர்கள் 2 பேரும் டிப்-டாப் உடை அணிந்து ஆம்னி பஸ்களில் பயணம் செய்வார்கள். இரவில் பயணிகள் அனைவரும் தூங்கியதும், நைசாக எழுந்து, பயணிகள் வைத்திருக்கும் சூட்கேஸ், பைகள் ஆகியவற்றை திறந்து அதில் இருக்கும் நகை, பணத்தை திருடி கைவரிசை காட்டி உள்ளனர். இதற்காக அவர்கள் போலி முகவரியை கொடுத்து பஸ்சில் டிக்கெட் முன்பதிவு செய்வார்கள்.

தற்போது கோவையில் இருந்து பெங்களூருவுக்கு செல்லவும், அங்கிருந்து மீண்டும் கோவைக்கு திரும்பி வரவும் பஸ்சில் டிக்கெட் முன்பதிவு செய்து உள்ளனர். அவர்களி டம் இருந்து சூட்கேஸ் மற்றும் பைகளில் இருக்கும் சிறிய பூட்டுகளை உடைக்க பயன்ப டும் ஸ்குரு டிரைவர் மற்றும் சில பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இவர்கள் 2 பேரும் ஒரு இடத்தில் திருடி விட்டு தங்களது சொந்த ஊருக்கு விமானத்தில் செல்வார்கள். அங்கு நகையை விற்பனை செய்துவிட்டு 15 நாள் கழித்து மீண்டும் விமானத்தில் மற்றொரு பகுதிக்கு செல்வார்கள். இவர்கள், ரெயிலில் செல்வது கிடையாது. பல்வேறு இடங்களில் நகை, பணத்தை கைவரிசை காட்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story