பவானிசாகர் அருகே, அட்டகாசம் செய்த சிறுத்தை கூண்டுக்குள் சிக்கியது - வேடிக்கை பார்க்க பொதுமக்கள் திரண்டனர்


பவானிசாகர் அருகே, அட்டகாசம் செய்த சிறுத்தை கூண்டுக்குள் சிக்கியது - வேடிக்கை பார்க்க பொதுமக்கள் திரண்டனர்
x
தினத்தந்தி 3 Oct 2019 4:00 AM IST (Updated: 3 Oct 2019 12:15 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அருகே அட்டகாசம் செய்த சிறுத்தை கூண்டுக்குள் சிக்கியது. அதை வேடிக்கை பார்க்க பொதுமக்கள் திரண்டனர்.

பவானிசாகர், 

பவானிசாகர் வனப்பகுதியை ஒட்டியுள்ளது புதுக்குய்யனூர் கிராமம். இங்குள்ளவர்கள் பெரும்பாலானோர் விவசாயிகள். ஆடு, மாடுகளும் வளர்த்து வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த வாரம் புதுகுய்யனூரை சேர்ந்த விவசாயி மூர்த்தி என்பவர் தோட்டத்தை ஒட்டியுள்ள தன்னுடைய வீட்டின் முன்பு ஆடுகளை கட்டி வைத்திருந்தார்.

அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒரு சிறுத்தை ஆட்டை கடித்து கொன்று விட்டது. அதன்பின்னர் மீண்டும் ஒருவரின் ஆட்டை சிறுத்தை வேட்டையாடியது. இதனால் புதுகுய்யனூர் பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்தார்கள்.

கிராமத்துக்குள் வந்து பழகிவிட்ட சிறுத்தை, மனிதர்களையும் அடித்து கொல்லும் என்று கிராமமக்கள் பயந்தார்கள். அதனால் அட்டகாசம் செய்யும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என்று பவானிசாகர் வனத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்கள். அதன்பேரில் வனச்சரகர் ஜான்சன் தலைமையில் வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் வனப்பகுதியை ஒட்டியுள்ள சண்முகம் என்பவருடைய தோட்டத்தில் கூண்டு அமைத்தார்கள்.

அந்த கூண்டின் மறுபக்கம் ஒரு ஆட்டு குட்டியையும் கட்டி வைத்தார்கள்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் காட்டை விட்டு வெளியே வந்த ஒரு சிறுத்தை சண்முகத்தின் தோட்டத்துக்கு வந்தது. பிறகு கூண்டுக்குள் இருக்கும் ஆட்டுக்குட்டியை பார்த்து அதை பிடிக்க சென்றது. அப்போது கூண்டின் முன்பக்க கதவு மூடிக்கொண்டது. இதனால் கூண்டுக்குள் சிறுத்தை சிக்கியது. கூண்டின் மறுபக்கம் இருந்த ஆட்டுக்குட்டியும் தப்பியது. இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை வனத்துறையினர் வந்து கூண்டை பார்த்தார்கள். அப்போது கூண்டுக்குள் சிக்கிய சிறுத்தை அங்கும், இங்கும் சென்றபடி உறுமியது. அதற்குள் சிறுத்தை சிக்கிய தகவல் கிடைத்து அங்கு பொதுமக்கள் திரண்டுவிட்டார் கள்.

இதைத்தொடர்ந்து வனத்துறை டாக்டர் அசோகன் வந்து சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தினார். ஆனால் சிறுத்தை மயக்கம் அடையவில்லை.இதனால் சிறிது நேரம் கழித்து மீண்டும் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. அப்போது சிறுத்தை மயக்கமடைந்தது.

இதைத்தொடர்ந்து கூண்டை லாரியில் ஏற்றி, சிறுத்தையை தெங்குமரஹடா வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார்கள். அங்கு கூண்டை திறந்ததும் மயக்கம் தெளிந்த நிலையில் இருந்த சிறுத்தை சீறிப்பாய்ந்து சென்றது. வனத்துறை டாக்டர் அசோகன் இதுபற்றி கூறும்போது, ‘பிடிபட்டது சுமார் 5 வயதுடைய ஆண் சிறுத்தை‘ என்றார்.

Next Story