மாகிம் ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயில் தடம் புரண்டது


மாகிம் ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயில் தடம் புரண்டது
x
தினத்தந்தி 3 Oct 2019 4:00 AM IST (Updated: 3 Oct 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

மாகிம் ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயில் தடம் புரண்டது. இதனால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டதுடன் பயணிகளும் அவதி யடைந்தனர்.

மும்பை,

மும்பை துறைமுக வழித்தடத்தில் நேற்று காலை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து பாந்திரா நோக்கி மின்சார ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. காலை 11.30 மணியளவில் மாகிம் ரெயில் நிலையம் அருகே சென்ற போது, திடீரென அந்த ரெயில் தடம் புரண்டது. ஒரு பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கின.

அப்போது அந்த பெட்டி பயங்கரமாக குலுங்கியது. இதனால் அதிர்ச்சியில் பயணிகள் அலறினர். விபரீதத்தை உணர்ந்த மோட்டார்மேன் உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.

ரெயில் தடம்புரண்ட இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர். தகவல் அறிந்து ரெயில்வே அதிகாரிகள் அங்கு வந்து பார்வையிட்டனர். தடம் புரண்ட மின்சார ரெயில் பெட்டியை தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் துரிதமாக ஈடுபட்டனர். இந்த சம்பவத்தின் காரணமாக நேற்று துறைமுக வழித்தடத்தில் மின்சார ரெயில் சேவை முடங்கியது.

நடுவழியில் நின்ற மின்சார ரெயில்களில் இருந்த பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி நடையை கட்டினார்கள். ரெயில் சேவை பாதிப்பால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

Next Story