பிறந்த நாளையொட்டி காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


பிறந்த நாளையொட்டி காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 3 Oct 2019 4:30 AM IST (Updated: 3 Oct 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

பிறந்த நாளையொட்டி பெரம்பலூரில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை மற்றும் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தியின் முழுஉருவ சிலைக்கு கலெக்டர் சாந்தா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அவர் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணல் காந்தியின் உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை கலெக்டர் சாந்தா தொடங்கி வைத்தார்.

பயன் பெறுகின்றனர்

அப்போது அவர் கூறுகையில், ஒவ்வொரு கிராமமும் தங்களது தேவைகளை தாங்களே பூர்த்தி செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் அண்ணல் காந்தியடிகளால் ஏற்படுத்தப்பட்ட கதர் திட்டத்தின் மூலம் கிராமங்களில் வாழும் வறுமை கோட்டின் கீழ் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் நூல் நூற்றல் மற்றும் நெசவு தொழில் செய்தல் மூலம் பயன் பெறுகின்றனர் என்றார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் (பொறுப்பு) நாகரத்தினம், வருவாய் கோட்டாட்சியர் சுப்பையா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாலசுப்பிரமணியன், நகராட்சி ஆணையர் ராதா, பெரம்பலூர் தாசில்தார் பாரதிவளவன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) பாரதி உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில்

இதே போல் மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தியின் சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில், அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதேபோல் பெரம்பலூர் மாவட்ட பாரத சாரண- சாரணியர் இயக்கத்தின் சார்பாக, அந்த இயக்கத்தின் மாணவ- மாணவிகள் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்திய தொழிலாளர் கட்சியின் தலைவர் ஈஸ்வரன் தலைமையில், அக்கட்சியின் இந்திய மாணவர்கள் பெருமன்றத்தை சேர்ந்த மாணவ- மாணவிகள் சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதே போல் காந்தி சிலைக்கு பல்வேறு அமைப்புகள், வணிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாலை அணிவித்தனர்.

Next Story