யாரும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம், கர்நாடகத்திற்கு வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு ஓரிருநாளில் விடுவிக்கும்


யாரும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம், கர்நாடகத்திற்கு வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு ஓரிருநாளில் விடுவிக்கும்
x
தினத்தந்தி 3 Oct 2019 4:30 AM IST (Updated: 3 Oct 2019 12:58 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்திற்கு வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கும் விவகாரத்தில் யாரும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும், மத்திய அரசு இன்னும் ஓரிரு நாட்களில் நிவாரண நிதியை விடுவிக்கும் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

மைசூரு, 

கர்நாடகத்தில் கடந்த ஆகஸ்டு மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்தது.

இதில் வடகர்நாடகம், கர்நாடக கடலோர மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. மழை வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் வீடுகள், உடைமைகளை இழந்தனர். பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மாநிலத்தில் சேதம் ஏற்பட்டது. ஆனால் கர்நாடகத்தில் நிவாரண பணிகளை மேற்கொள்ள இதுவரை மத்திய அரசு நிதி வழங்கவில்லை.

இதற்கிடையே பீகாரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், அங்கு நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் விரைவில் நிதி ஒதுக்கி தருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது கர்நாடக மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தை கண்டு கொள்ளாத பிரதமர் மோடிக்கு எதிராக கர்நாடக பா.ஜனதா தலைவர்களே கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்திற்கு மத்திய அரசு இதுவரையில் நிவாரண நிதி வழங்காதது குறித்து மைசூருவில் நேற்று முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அதற்கு பதிலளித்து முதல்-மந்திரி எடியூரப்பா கூறியதாவது:-

கர்நாடக மாநிலத்திற்கு மத்திய அரசு நிவாரண நிதி வழங்குவதற்கு காலம் தாழ்த்தி வருவது குறித்து ஏராளமான விமர்சனங்கள் பரவி வருகின்றன. ஆனால் இன்னும் ஓரிரு நாட்களில் நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்கும். கர்நாடகத்தில் உள்ள சூழ்நிலை குறித்து பிரதமர் மோடிக்கு நன்றாக தெரியும்.

கர்நாடகத்தின் மீது பிரதமர் மோடியின் மாறுபட்ட நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். நிவாரண நிதி விஷயத்தில் யாரும் குழப்பத்தை உண்டாக்க வேண்டாம். எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களோ?, பா.ஜனதாவை சேர்ந்தவர்களோ?, யாரும் இவ்விஷயம் குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம். மத்திய அரசு சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எந்தவொரு மாநிலத்திற்கும் இதுவரையில் நிவாரண நிதி அறிவிக்கப்படவில்லை.

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்திருந்தார். தற்போது அவர் இந்தியாவுக்கு திரும்பி விட்டார். அதனால் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் நிவாரண நிதி ஒதுக்கப்படும்.

இந்த விஷயத்தில் பிரதமர் மோடியை யாரும் சந்திக்கவோ, அவரை வலியுறுத்தவோ தேவையில்லை. பிரதமர் மோடிக்கு நாட்டில் நிலவும் சூழ்நிலை குறித்து நன்கு தெரியும். உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கும் நன்றாக இதுபற்றி தெரியும். அதனால் நிவாரண நிதி விரைவில் ஒதுக்கப்படும். அரசு துறைகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகள் ஆகியவை மழையால் பாதிக்கப்பட்ட அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுடன் சேர்ந்து நிவாரண பணிகளை செய்து வருகிறது.

மத்திய அரசு நிவாரண பணிகளை மேற்கொள்ள தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளது. கர்நாடக அரசு சார்பில் வேண்டுகோள் விடுத்தால் உடனடியாக மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்.

இவ்வாறு முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

முன்னதாக கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா, கர்நாடகத்திற்கு நிவாரண நிதியை ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வரும் பிரதமர் மோடிக்கு எதிராக தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டார். அதில், “உங்களுக்கு ஏன் கர்நாடகத்தின் மீது இந்த வெறுப்புணர்வு என்று எங்களுக்கு தெரிய வேண்டும். கர்நாடகத்தில் பல பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டும் நீங்கள் அதுபற்றி எந்தவொரு பதிலையும் கூறவில்லை. கர்நாடக மாநிலம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு 60 நாட்களுக்கும் மேல் ஆகிறது. வீடுகள் இல்லை, சாப்பிட உணவு இல்லை, கால்நடைகள் செத்துக் கொண்டிருக்கின்றன. பயிர்கள் நாசமாகி கொண்டிருக்கின்றன. ஏன் உங்களுக்கு கர்நாடகத்தின் மீது வெறுப்பு?. கர்நாடக எம்.பி.க்கள் 25 பேர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். நரேந்திர மோடி காணாமல் போய் விட்டார். தயவு செய்து அவரை கண்டுபிடிக்க கர்நாடக பா.ஜனதா எம்.பி.க்கள் 25 பேரும் எங்களுக்கு உதவுங்கள்“ என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story