கொள்ளையர்களின் கூடாரமாக மாறி வரும் பெரம்பலூர் நகரம் மர்மநபர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்


கொள்ளையர்களின் கூடாரமாக மாறி வரும் பெரம்பலூர் நகரம் மர்மநபர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்
x
தினத்தந்தி 2 Oct 2019 10:30 PM GMT (Updated: 2 Oct 2019 7:31 PM GMT)

தொடர் சம்பவங்களால் பெரம்பலூர் நகரம் கொள்ளையர்களின் கூடாரமாக மாறி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கொள்ளை- சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட மர்மநபர்களை பிடிக்க முடியாமல் பெரம்பலூர் போலீசார் திணறி வருகின்றனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் நகர் பகுதியில் ஏற்கனவே சமீப காலமாக தொடர் கொள்ளை சம்பவங்கள், தங்க சங்கலி பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சத்துடனேயே காணப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெரம்பலூர் ரோவர் நகரை சேர்ந்தவரும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வரும் சுரே‌‌ஷ்குமார் வீட்டில் 40 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதேபோல் கொள்ளை நடந்த வீட்டின் அருகே உள்ள தனியார் பள்ளியிலும் இரும்பு கம்பிகளை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். கடந்த 26-ந் தேதி பெரம்பலூர் நான்கு ரோடு மோனி‌ஷா நகரை சேர்ந்தவரும், தனியார் கல்லூரி உயர்கல்வி இயக்குனராக பணிபுரியும் பாலமுருகன் வீட்டில் 2 பவுன் நகையையும், 250 கிராம் வெள்ளி பொருட்களையும் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள், தற்போது பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்க சங்கிலி பறிப்பு

கடந்த 29-ந் தேதி இரவு பெரம்பலூர் அருகே அம்மாபாளையம் மெயின் ரோட்டை சேர்ந்த ராஜாவின் மனைவி சங்கீதா தனது வீட்டின் பின்புறத்தில் பாத்திரங்களை கழுவி கொண்டிருந்த போது, அங்கு வந்த 3 முகமூடி கொள்ளையர்கள் அரிவாளை காட்டி மிரட்டி சங்கீதா கழுத்தில் கிடந்த 2 பவுன் நகைகளை பறித்தனர். அப்போது சங்கீதா கொள்ளையன், கொள்ளையன் என்று சத்தமிட்டதை கேட்டு, வீட்டில் இருந்து ஓடி வந்த அவருடைய கணவர் ராஜா மீது கொள்ளையர்கள் வாளியில் இருந்த தண்ணீரை ஊற்றி விட்டு தப்பினர். பெரம்பலூர் வெங்கடாஜலபதி நகரில் மகள் வீட்டில் வசித்து வரும் மணி என்கிற பெண் நேற்று முன்தினம் இரவு பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே நடந்து சென்ற போது, அவரை பின்தொடர்ந்து வந்த ஒரு மர்மநபர், மணி அணிந்திருந்த 4½ பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றான்.

தீவிர ரோந்து பணியில்

இதனால் கொள்ளையர்களின் கூடாரமாக பெரம்பலூர் நகரம் மாறி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனாலும் ஒரு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை பிடிப்பதற்குள், அடுத்தடுத்த கொள்ளை சம்பவம், சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி வருவதால் பெரம்பலூர் போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதனால் மர்மநபர்களை போலீசார் பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்த கொள்ளை, சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே மர்ம கும்பலாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தொடர் கொள்ளை, சங்கலி பறிப்பு சம்பவங்களை தடுக்க பெரம்பலூரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடவும், சந்தேகம்படும்படியாக சுற்றித்திரியும் நபர்களையும் பிடித்தும் போலீசார் விசாரிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பெரம்பலூர் வழியாக மணல் கடத்தல், பெரம்பலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை, அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை, சட்ட விரோதமாக மது விற்பனையும் கொடி கட்டி பறப்பதாகவும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர். அதனையும் முற்றிலும் தடுத்து நிறுத்த மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.

Next Story