கரூர் ரெயில் நிலைய வளாகத்தில் தூய்மை பணி காலி பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்க நவீன எந்திரம்


கரூர் ரெயில் நிலைய வளாகத்தில் தூய்மை பணி காலி பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்க நவீன எந்திரம்
x
தினத்தந்தி 2 Oct 2019 11:00 PM GMT (Updated: 2 Oct 2019 7:56 PM GMT)

காந்தி பிறந்ததினத்தையொட்டி கரூர் ரெயில் நிலைய வளாகத்தில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் காலி பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்கும் வகையிலான நவீன எந்திரம் பயணிகளின் பயன்பாட்டுக்காக தொடங்கி வைக்கப்பட்டது.

கரூர்,

கரூர் ரெயில் நிலையத்தில், தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கு நிலைய மேலாளர் ராஜராஜன் தலைமை தாங்கினார். முதன்மை சுகாதார ஆய்வாளர் ஜெயகோபால், முதன்மை வணிக ஆய்வாளர் பிரிஜேஸ்குமார் சர்மா ஆகியோர், ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் முன்னிலை வகித்தனர். அப்போது ரெயில்நிலையம், பஸ்நிலையம், மருத்துவமனை, கோவில் உள்பட பொதுஇடங்கள், வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் தூய்மையை கடைபிடிப்போம்... வாரத்தில் 2 மணி நேரமாவது தூய்மை பணியில் தங்களை ஈடுபடுத்துவோம்... பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம்... என உறுதிமொழியேற்றனர். இதைத்தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள், துப்பரவு பணியாளர்கள், ரெயில்வே ஊழியர்கள், ரெயில்வே பாதுகாப்பு படையினர் உள்ளிட்டோர் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரெயில் நிலைய வளாகத்திலுள்ள வேண்டாத செடி கொடிகளை அப்புறப்டுத்தி தூய்மை பணியை மேற்கொண்டனர்.

காலி பிளாஸ்டிக் பாட்டில்கள்

அக்டோபர் 2-ந்தேதி முதல் ரெயில் நிலையத்தில் பாலித்தீன் பை, பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட தட்டு, டம்ளர், உறிஞ்சி குழல் உள்ளிட்ட ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி வீசப்படும் வகையிலான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ்வாறு விதி மீறி பயன்படுத்துபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் ரெயில்வே சுகாதார துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில் ஒரு முறை பயன்படுத்தி விட்டு தூக்கி வீசப்படும் காலி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை சேகரிக்கம் வகையிலான எந்திரம் ஒன்று புதிதாக கரூர் ரெயில் நிலையத்தில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த எந்திரத்தில் குடிநீர் பிடித்து குடிப்பது, செல்போனுக்கு சார்ஜ் செய்வது உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகள் இருக்கின்றன. இதில் சேகரிக்கப்படும் காலி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களானது பின்னர் தூளாக்கப்பட்டு சிமெண்டு ஆலை, சாலை போடும் பணி உள்ளிட்டவற்றுக்கு மறுசுழற்சிக்காக பயன்படுத்தப்படுகிறது.

நடைமேடையில் சார்ஜ் பாய்ண்ட்

இதைத்தொடர்ந்து நேற்று கரூர் ரெயில் பயணிகள் தங்ளது தண்ணீர் பாட்டிலை அதில் போட்டு விட்டு, குடிநீர் குடித்து சென்றனர். இதைத் தவிர ரெயில் நிலைய நடைமேடையில் ரெயிலுக்கு காத்திருக்கும் பயணிகள் தற்காலிகமாக தங்களது செல்போனுக்கு சார்ஜ் போட்டு கொள்ளும் பொருட்டு சார்ஜ் பாய்ண்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 3 நடைமேடைகளில் தலா 2 சார்ஜ் பாய்ண்ட்டுகள் உள்ளன. அதில் பயணிகள் தங்களது செல்போன்களுக்கு சார்ஜ் போட்டு பயன்படுத்தி வருகின்றனர்.

Next Story