உடுமலை ஜெய்சக்தி நகரில், செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
உடுமலை அருகே ஜெய்சக்தி நகரில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அங்கு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடுமலை,
உடுமலை அருகே உள்ள கணக்கம்பாளையம் ஊராட்சியில் ஜெய்சக்தி நகர் உள்ளது. இங்கு தனியார் நிறுவனத்தின் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அப்படியிருந்தும் அங்கு செல்போன் கோபுரம் அமைப்பதற்காக கம்பி கட்டி கான்கிரீட் அமைப்பதற்கான பணிகள் நடந்து வந்தன.
இந்த நிலையில் கணக்கம்பாளையம் ஊராட்சியின் கிராமசபை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஜெய்சக்தி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள குடியிருப்புகளைச்சேர்ந்த பொதுமக்கள் ஜெய்சக்தி நகரில் செல்போன் கோபுரம் அமைக்க அனுமதிக்கக்கூடாது என்று மனு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து ஜெய்சக்தி நகருக்கு வந்தனர்.அங்கு செல்போன் அமைப்பதற்கான பணிகள் நடைபெறும் இடத்திற்கு அருகில் திரண்டு நின்றனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் கிடைத்ததும் உடுமலை போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர். அதன் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து ஜீவா நகர், ஜெய்சக்தி நகர், ஆறுமுகம் லேஅவுட், உமாபிருந்தா லேஅவுட், விஜயகிரிநகர், ராயல் லட்சுமிநகர்,குப்பண்ண கவுண்டர் லேஅவுட் ஆகிய குடியிருப்பு பகுதிகளைச்சேர்ந்த பொதுமக்கள் ஒரு கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ளனர்.
அதில் ஜெய்சக்தி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில் பல குடியிருப்புகள் உள்ளன. அதனால் அங்கு செல்போன் கோபுரம் அமைத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் அங்கு செல்போன் கோபுரம் அமைப்பதை தடுத்து நிறுத்த கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story