அமித்ஷாவை சந்தித்து பேசுவோம், மத்திய அரசு சரியான நேரத்தில் நிவாரணம் வழங்கும் - மத்திய மந்திரி சதானந்தகவுடா பேட்டி


அமித்ஷாவை சந்தித்து பேசுவோம், மத்திய அரசு சரியான நேரத்தில் நிவாரணம் வழங்கும் - மத்திய மந்திரி சதானந்தகவுடா பேட்டி
x
தினத்தந்தி 3 Oct 2019 3:30 AM IST (Updated: 3 Oct 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

மழை நிவாரணம் வழங்குவது குறித்து அமித்ஷாவை சந்தித்து பேசுவோம் என்றும், மத்திய அரசு சரியான நேரத்தில் நிவாரணம் வழங்கும் என்றும் மத்திய மந்திரி சதானந்தகவுடா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நேற்று மத்திய மந்திரி சதானந்தகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பெங்களூரு,

கர்நாடகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு நிவாரணம் வழங்கவில்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு கூறி வருகிறார்கள். மழை பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் தொய்வு இல்லாமல் நடைபெற்று வருகிறது. மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் மழை பாதித்த பகுதிகளை பார்வையிட்டு சென்றுள்ளனர். மத்திய குழுவும் கர்நாடகத்திற்கு வந்து ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

டெல்லியில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளேன். அப்போது மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து மாநிலத்தில் மழை பாதிப்புக்கான நிவாரணம் வழங்குவது குறித்து பேசுவேன். மத்திய மந்திரிசபை கூட்டத்தில் பிரகலாத் ஜோஷியும் கலந்து கொள்ள உள்ளார். அவரும், நானும் சேர்ந்து அமித்ஷாவை சந்தித்து பேசுவோம்.

வடகர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போதும் மழை பெய்து வருகிறது. மழை பெய்யும் போது வீடுகள் கட்ட முடியாது. மத்திய அரசு சரியான நேரத்தில் நிவாரணம் வழங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதற்கு முன்பு ஆட்சியில் மத்திய அரசு வழங்கிய நிவாரணம் தவறாக பயன்படுத்தப்பட்டது. பா.ஜனதா ஆட்சியில் அப்படி நடக்காது. மத்திய அரசிடம் இருந்து பெற்ற நிவாரணத்தை முந்தைய ஆட்சியாளர்கள் கொள்ளையடித்தார்கள். மத்திய அரசு நிவாரணம் வழங்கியதும், அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும். அந்த பணிகளில் மத்திய, மாநில அரசுகள் சரியாக செயல்படும்.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவது உறுதி. எழுத்தாளர் சக்கரவர்த்தி சூழிபெலே, மத்திய-மாநில அரசுகள் மீதும், மக்களை திசை திருப்பும் நோக்கத்திலும் வாய்க்கு வந்ததை பேசியுள்ளார். இதுபோன்று பேசுபவர்கள் தேசதுரோகிகள். அவர்களை பற்றி அதிகம் பேச விரும்பவில்லை.

இவ்வாறு சதானந்தகவுடா கூறினார். 

Next Story