காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றது: ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றது: ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்
x
தினத்தந்தி 2 Oct 2019 11:00 PM GMT (Updated: 2 Oct 2019 8:46 PM GMT)

கர்நாடக, தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வது நின்றதால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடையை மாவட்ட நிர்வாகம் நீக்கியது.

பென்னாகரம்,

கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் நடைபாதையை மூழ்கடித்தபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

இந்தநிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வது நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறையத்தொடங்கியது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 9,500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து நேற்று மாலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அலுவலர்கள் அளந்து கண்காணித்து வருகின்றனர்.

பரிசல் இயக்க தடை நீக்கம்

இதனிடையே நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) அழகிரிசாமி, உதவி கலெக்டர் (பொறுப்பு) தேன்மொழி, தாசில்தார் சதாசிவம், வட்டார வளர்ச்சி அலுவலர் மணிகண்டன், துணை போலீஸ் சூப்பிரண்டு மேகலா மற்றும் அலுவலர்கள் ஒகேனக்கல்லுக்கு சென்று காவிரி ஆற்றில் நீர்வரத்தை பார்வையிட்டனர். மேலும் அவர்கள் பரிசல் இயக்குவது குறித்து பரிசலில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து இருப்பதால் பரிசல் இயக்க அனுமதி வழங்கலாம் என்று கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர்.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் மலர்விழி 27 நாட்களுக்கு பிறகு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டார். பரிசலில் சின்னாறு பரிசல் துறையில் இருந்து கூட்டாறு வழியாக மட்டுமே பரிசல் இயக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால் வெள்ளப்பெருக்கால் மெயின் அருவியில் இரும்பு தடுப்பு கம்பிகள் அடித்து செல்லப்பட்டது. இதனால் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 56 நாட்களாக தொடர்ந்து நீடிக்கிறது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை நீங்கியதால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் காவிரி கரையில் குளித்தும், பாதுகாப்பு உடை அணிந்து பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.


Next Story