ஆண்டாள் சூடிய மாலை திருப்பதிக்கு புறப்பட்டது


ஆண்டாள் சூடிய மாலை திருப்பதிக்கு புறப்பட்டது
x
தினத்தந்தி 3 Oct 2019 3:30 AM IST (Updated: 3 Oct 2019 3:10 AM IST)
t-max-icont-min-icon

பிரம்மோற்சவத்தின் போது ஏழுமலையான் அணிவதற்காக ஆண்டாள் சூடிய மாலை ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து திருப்பதிக்கு கிளம்பியது.

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் திருப்பதி கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மாலை திருப்பதிக்கு கொண்டு செல்லப்படும்.

அந்த வகையில் இந்த ஆண்டு திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவிற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஆண்டாள் சூடிய மாலை திருப்பதிக்கு புறப்படும் வைபவம் நேற்று மாலை விமரிசையாக நடைபெற்றது. இதற்காக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட பிரமாண்டமான மாலை ஆண்டாள் நாச்சியாருக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும், தீப வழிபாடும் நடைபெற்றன.

இதைத்தொடர்ந்து ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் பின்னர் ஆண்டாள் சூடிய மாலை ஒரு கூடையில் வைத்து கிளி மற்றும் வஸ்திரம் ஆகியவற்றோடு சேர்த்து திருப்பதி கிளம்பியது. முன்னதாக மேளதாளம் முழங்க மாட வீதிகள் வழியாக மாலை எடுத்து வரப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை காண்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமன்றி விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அங்கு குவிந்திருந்தனர்.ஆண்டாள் சூடிய மாலை கிளம்பும் நிகழ்ச்சியில் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோவில் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிய மாலை திருப்பதிக்கு செல்லும் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் ராம்கோ நிறுவனம் சார்பில் செய்யப்பட்டு இருந்தது.

திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளன்று கருட சேவையின் போது ஏழுமலையான், ஆண்டாள் சூடிய மாலையை அணிந்துகொண்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

Next Story