மகாத்மா காந்தி 150-வது பிறந்த நாள் - கலெக்டர் தலைமையில் ஊர்வலம்
விருதுநகரில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு கலெக்டர் தலைமையில் நடந்த ஊர்வலத்தில் பொது மக்களும் மாணவ-மாணவிகளும் திரளாக பங்கேற்றனர்.
விருதுநகர்,
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளன. அதன் படி நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை அரசின் சார்பிலும் பல்வேறு அரசியில் கட்சியினரும் சிறப்பாக கொண்டாடினர். விருதுநகரிலும் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி பல்வேறு நிகழ்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கலெக்டர் சிவஞானம் தலைமையில் விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. இதில் போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், மாவட்ட வருவாய் அதிகாரி உதயகுமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் பொதுமக்களும், மாணவ-மாணவிகளும், போலீசாரும் திரளாக பங்கேற்றனர். ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாவட்ட விளையாட்டு அரங்கில் முடிவடைந்தது.
விளையாட்டு அரங்கில் கலெக்டர் தலைமையில் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தியும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்தும் உறுதிமொழி எடுத்துகொண்டனர். இதனை தொடர்ந்து விளையாட்டு அரங்கில் பெண்கள், மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் சிவஞானம் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
விருதுநகர் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள காந்தி சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர், முன்னாள் நகரசபை துணைத்தலைவர் பாலகிருஷ்ணசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதே போன்று பாரதீய ஜனதா கட்சியினரும் ஊர்வலமாக சென்று மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் மாணவ-மாணவிகளும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பல்வேறு கல்வி நிறுவனங்களில் மகாத்மா காந்தியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
விருதுநகர் ரெயில் நிலையம் அருகே உள்ள காந்தி சிலைக்கு அமிர்தா பவுண்டேசன் நிறுவனர் உமையலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ராஜபாளையம் நகர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நகர தலைவர் ஜெகநாதராஜா தலைமையில் வட்டார தலைவர் தவமணிகுரு முன்னிலையில் நகர செயல் தலைவர் ராதாகிருஷ்ணன், கண்ணன், வெங்கட்ராமன் மற்றும் நிர்வாகிகள் காந்தி சிலை ரவுண்டானாவில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருச்சுழி அரசு நூலகத்தில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. வாசகர் வட்டம் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு தபால் துறை ஊழியர் சாரங்கபாணி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத்துறை தணிக்கை ஆய்வாளர் நாகநாதன் மகாத்மா காந்தியின் அஹிம்சை போராட்டங்கள் குறித்தும், அவருடைய தியாகங்களையும் பட்டியலிட்டார். நூலகர் பாஸ்கரன், ஒருங்கிணைப்பாளர் அழகேசன், நூலகப்பணியாளர் பாண்டிதேவி, வாசகர் வட்டத்தைச் சேர்ந்த வீரராஜன், ஸ்ரீதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயாவில் நடந்த விழாவுக்கு பள்ளியின் தாளாளர் முருகேசன் தலைமை தாங்கி மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பள்ளி முதல்வர் ராணி முன்னிலை வகித்தார். முன்னதாக ஆசிரியை அங்காள ஈஸ்வரி வரவேற்புரையாற்றினார். முடிவில் ஆசிரியை சுகந்தி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story