மதுரை மண்தான் காந்திக்கு வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்தியது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
மதுரை மண்தான் காந்திக்கு வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்தியது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
மதுரை,
காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மேலமாசி வீதியில் உள்ள கதர் விற்பனை நிலையத்தில் காந்தி சிலைக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து கதர் ஆடைகள் தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட கலெக்டர் ராஜசேகர், மாநகராட்சி கமிஷனர் விசாகன், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.எஸ்.சரவணன், மாணிக்கம், மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன், பேரவை மாநில துணைசெயலாளர் வெற்றிவேல், திருப்பரங்குன்றம் பகுதி துணை செயலாளர் ஐ.பி.எஸ்.பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
காந்தி மதுரைக்கு வந்த போது குஜராத் உடைகளை அணிந்து கொண்டு தலையில் நீளமான டர்பன் கட்டிக்கொண்டு வந்துள்ளார். அப்போது இந்த இடத்தில் உள்ள மாடத்தில் நின்று மக்களை பார்த்துக் கொண்டிருந்த போது விவசாயிகள் எல்லாம் ஏழ்மையின் காரணமாக அரை ஆடை அணிந்து கொண்டு நடந்து சென்றனர். இதைப்பார்த்த காந்தி கண் கலங்கி என்றைக்கு அனைத்து மக்களும் முழு ஆடை அணிகிறார்களோ அன்று தான் நான் முழு ஆடையை அணிவேன் என்று கூறி அன்று முதல் இந்த இடத்தில் தான் அரையாடையை மேற்கொண்டார். இந்த இடம் தான் காந்தியின் உள்ளம் உறுதியை உலகுக்கு எடுத்து காட்டியது. மேலும் காந்தி ஐக்கிய நாட்டு சபைக்கு செல்லும்போது கூட வேறு உடை அணியாமல் இந்திய நாட்டின் அடையாளமாக இந்த அரை ஆடை இருக்கட்டும் என்று கூறினார்.
அதன் மூலம் மதுரை மண் தான் காந்திக்கு வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்தி, அவரது வாழ்க்கை முறையை மாற்றியது. துப்பாக்கி, அணுகுண்டால் சாதிக்க முடியாததை தனது அகிம்சையால் சாதிக்க முடியும் என்று உலகிற்கு உணர்த்தினார். எனவே காந்தி பிறந்த இந்நாளில் நாம் அனைவரும் கதர் ஆடை அணிந்து நெசவாளர்களின் வாழ்க்கையை உயர்த்துவோம். கிராமத்தின் முன்னேற்றமே தேசத்தின் முன்னேற்றம். கிராமத்தின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி என்று காந்தியின் எண்ணத்தை நினைவாக்கும் வகையில் கிராமத்தில் விவசாயியாக பிறந்து தன் உழைப்பால் முதல்-அமைச்சராக உயர்ந்து கிராமத்தின் வளர்ச்சியை உருவாக்கியதன் மூலம் காந்தி கண்ட கனவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நினைவாக்கி வருகிறார். உலகத்தின் மாற்றம் நம்மிடம் இருந்து தான் தொடங்க வேண்டும் என்று காந்தி கூறியதை பின்பற்றும் வகையில் கதர் சட்டை, கதர்வேட்டி தான் அணிந்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story