சிங்கப்பூரில் இருந்து கடத்தல்: மதுரை விமான நிலையத்தில் ரூ.81 லட்சம் தங்க கட்டிகள் சிக்கின - திருச்சியை சேர்ந்தவர் கைது


சிங்கப்பூரில் இருந்து கடத்தல்: மதுரை விமான நிலையத்தில் ரூ.81 லட்சம் தங்க கட்டிகள் சிக்கின - திருச்சியை சேர்ந்தவர் கைது
x
தினத்தந்தி 3 Oct 2019 3:45 AM IST (Updated: 3 Oct 2019 3:10 AM IST)
t-max-icont-min-icon

சிங்கப்பூரில் இருந்து ரூ.81 லட்சம் மதிப்பிலான தங்கக்கட்டிகளை கடத்தி வந்தவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

மதுரை, 

சிங்கப்பூரில் இருந்து மதுரை வரும் விமானத்தில் கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுவதாக மதுரை சுங்க புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனால் உஷாரான அதிகாரிகள், சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை தீவிரமாக சோதனையிட்டனர். சுங்க புலனாய்வுத்துறை உதவி கமிஷனர் டாக்டர் வெங்கடேஷ்பாபு, தலைமையிலான அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர். அந்த விமானத்தில் வந்த திருச்சியை சேர்ந்த தஸ்தகிர்(வயது 47) என்பவரது நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதைதொடர்ந்து அவரை தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினர். அவரது உடைமைகளையும் தனி அறையில் வைத்து சோதனை செய்தனர். அப்போது அவர் கொண்டு வந்த பெட்டியில் மின்சாரம் இல்லாத போது பயன்படுத்தப்படும் ‘எமர்ஜென்சி லைட்’கள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பரிசோதித்து பார்த்தபோது, அது செயல்படாமல் இருந்தது. இதனால் அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது.

இதனை தொடர்ந்து அந்த ‘எமர்ஜென்சி லைட்’களை அதிகாரிகள் உடைத்து பார்த்தனர். அப்போது அதில் தங்க கட்டிகள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 21 தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து தஸ்தகிரை கைது செய்தனர்.

இதுகுறித்து உதவி கமிஷனர் வெங்கடேஷ்பாபு கூறும்போது, “சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தபோது 3 எமர்ஜென்சி லைட்டுகளில் கடத்தி வந்த 21 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக தஸ்தகிரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். கடத்தி வந்த தங்க கட்டிகளின் மொத்த எடை 2100 கிராம் ஆகும். அவற்றின் மதிப்பு ரூ. 81 லட்சத்து 20 ஆயிரத்து 700 ஆகும்” என்றார். இலங்கையில் இருந்து ரூ.21 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த சங்கர் என்பவரை சுங்க புலனாய்வுத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Next Story