நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் - கனிமொழி எம்.பி. பேச்சு


நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் - கனிமொழி எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 2 Oct 2019 11:15 PM GMT (Updated: 2 Oct 2019 9:40 PM GMT)

நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என கனிமொழி எம்.பி. கூறினார்.

களக்காடு, 

நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் போட்டியிடுகிறார். இந்த தேர்தல் பணிக்காக களக்காட்டில் கூட்டணி சார்பில் தேர்தல் அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் வேட்பாளர் ரூபி மனோகரனை அறிமுகப்படுத்தி பேசியதாவது:-

இந்த இடைத்தேர்தல் முக்கியமான தேர்தல் ஆகும். அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய ஏராளமான அமைச்சர்கள் இங்கு வந்து இருக்கிறார்கள். பொதுமக்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. அதற்கெல்லாம் வராத இந்த அமைச்சர்கள் இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக வந்து இருக்கிறார்கள்.

அ.தி.மு.க.வினர் பணம் கொடுத்து ஓட்டு வாங்கி விடலாம் என நினைக்கிறார்கள். பொதுமக்களை கொச்சைப்படுத்தும் அமைச்சர்களுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இந்த தேர்தலில் நீங்கள் பாடம் புகட்ட வேண்டும். இந்த ஆட்சியில் ஒரு தொழிற்சாலை கூட தொடங்கப்படவில்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்தார். அவர், பல கோடி ரூபாய் அன்னிய முதலீடுகளை தமிழகத்துக்கு கொண்டு வருவதாக கூறுகிறார். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அவரும் பல கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலைகள் தொடங்கப்படும் என்று கூறினார். இதுவரை எந்த வெளிநாட்டு முதலீடும் தமிழகத்துக்கு வரவில்லை.

ஆனால், கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் எத்தனையோ வெளிநாட்டு முதலீடுகள் வந்தன. பல தொழி ற்சாலைகள் தொடங்கப்பட்டன. தற்போது தமிழகத்தில் தொழில் வளர்ச்சி இல்லை. சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் தீர்க்கப்படவில்லை. கலைஞர் ஆட்சி காலத்தில்தான் தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டம் தொடங்கப்பட்டது. அந்த திட்டம் இதுவரை முடிக்கப்படவில்லை.

மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு தமிழகத்துக்கு எதிரான திட்டங்களை திணித்து வருகிறது. படிப்படியாக இந்தியை திணிக்க நினைக்கிறார்கள். முத்தலாக் தடை போன்ற மக்கள் விரோதமான சட்டங்கள் கொண்டு வரப்படுகிறது. இதனை தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன.

நீட் தேர்வு மோசடி தேர்வாக மாறி விட்டது. விரைவில் தமிழகத்தில் பொதுத்தேர்தல் வரும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வருவார். அதற்கு நாங்குநேரி தொகுதி ஒரு முன்னோட்டமாக அமைய வேண்டும். இந்த இடைதேர்தல் அ.தி.மு.க.வுக்கு பாடமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் நாங்குநேரி தொகுதி தி.மு.க. பொறுப்பாளர் ஐ.பெரியசாமி, எம்.பி.க்கள் வசந்தகுமார், ஞானதிரவியம், நாங்குநேரி தொகுதி வேட்பாளர் ரூபி மனோகரன், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், மைதீன்கான் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.எம்.சிவகுமார், மாவட்ட மகளிர் அணி தலைவி தனித்தங்கம், முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தர், முன்னாள் யூனியன் தலைவர் ஜார்ஜ் கோசல், ஒன்றிய துணை செயலாளர் கருப்பசாமி பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக கனிமொழி எம்.பி. களக்காட்டில் உள்ள காந்தி, காமராஜர், அம்பேத்கர், அண்ணா ஆகிய தலைவர்களின் சிலைகளுக்கும், முத்துராமலிங்க தேவர் உருவ படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தார். முன்னதாக கனிமொழி எம்.பி.க்கு கூட்டணி கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

காந்தி பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை டவுனில் உள்ள காந்தி சிலைக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வசந்தகுமார் எம்.பி., நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.எம்.சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story