அமிர்தி பூங்காவை இரவிலும் பொதுமக்கள் பார்க்க நடவடிக்கை - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்
அமிர்தி பூங்காவை பகலில் மட்டுமல்லாமல் இரவிலும் பொதுமக்கள் பார்க்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
அடுக்கம்பாறை,
வேலூரை அடுத்த அமிர்தியில் வனஉயிரினவார தொடக்கவிழா நடந்தது. விழாவுக்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலர் ஷம்பு கல்லோலிகர் தலைமை தாங்கினார். முதன்மை தலைமை வனபாதுகாவலர்கள் துரைராசு, சஞ்சய்குமார் ஸ்ரீவத்சவா ஆகியோர் வரவேற்றனர். கலெக்டர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார்.
விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.சி.வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசினர். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-
1977-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சிகாலத்தில் அமிர்தி சிறுவன உயிரின பூங்கா தொடங்கப்பட்டது. 20 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் 10 ஏக்கரில் செடிகள் வளர்க்கப்படுகிறது. ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட விருந்தினர் மாளிகை இங்குள்ளது. சிவாஜிகணேசன், பத்மினி நடித்த ஸ்ரீவள்ளி திரைப்படம் 1960-ல் இங்கு படமாக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் காடுகள், விலங்குகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பதை அறிந்துகொள்வதற்காக எனது தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்தார். வெளிநாட்டில் காடுகள் பாதுகாக்கப்படுவது போன்று தமிழ்நாட்டிலும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அமிர்தி பூங்காவை பொதுமக்கள் தற்போது பகல்நேரத்தில் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். இனி இரவிலும் பார்க்க நடவடிக்கை எடுக்கப்படும். பனை மரம் வளர்ப்பதற்காக முதல்-அமைச்சர் ரூ.1 கோடியே 38 லட்சம் ஒதுக்கி உள்ளார். அமிர்தி பூங்காவில் தினக்கூலியாக வேலைபார்த்துவந்த 29 மலைவாழ் மக்கள் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளார்கள்.
வாணியம்பாடி பகுதியில் உள்ள சந்தனமரம் மற்றும் செம்மரங்களை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். சந்தன மற்றும் செம்மரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு செம்மரங்கள் ஆன்லைன் மூலம் டெண்டர் விடப்பட்டதில் அரசுக்கு ரூ.62 கோடி வருமானம் கிடைத்துள்ளது. நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றதொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெறும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் 28 மகளிர் குழுக்களுக்கு ரூ.38¾ லட்சம், 323 தனிநபர்களுக்கு ரூ.32 லட்சத்து 30 ஆயிரம் என மொத்தம் ரூ.71 லட்சம் கடன் வழங்கப்பட்டது. வனத்துறை பள்ளி மாணவ- மாணவிகள் 19 பேருக்கு சீருடை, 8 பேருக்கு நோட்டு புத்தகங்கள், போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் ஆகியவையும் வழங்கப்பட்டது.
முகம்மது ஜான் எம்.பி., மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம், மாவட்ட வன அலுவலர்கள் முருகன், கிருபாசங்கர், வேலூர் மாவட்ட வனஅலுவலர் பார்கவதேஜா, ஆவின் தலைவர் வேலழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராமு, கணியம்பாடி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ராகவன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story