கதர் வாரிய பொருட்களை அரசு ஊழியர்கள் வாங்க வேண்டும் - கலெக்டர் ஷில்பா பேச்சு
கதர் வாரிய பொருட்களை அரசு ஊழியர்கள் வாங்க வேண்டும் என நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கூறினார்.
நெல்லை,
பாளையங்கோட்டையில் உள்ள காதி கிராப்ட் உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. காதி உதவி இயக்குனர் சுதாகர் தலைமை தாங்கினார்.
நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவர் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த காந்தி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு வாழ்வளிக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்துடன் கதர் கிராம தொழில் வாரியத்தை மகாத்மா காந்தி தொடங்கினார். இந்த வாரியம் மூலம் கிராமப்புறங்களில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு நூற்பு நிலையங்கள் மூலம் நூற்பு பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நெல்லை மாவட்டத்தில் கீழப்பாவூர், வள்ளியூர் ஆகிய இடங்களில் கதர் உற்பத்தி நிலையங்கள் செயல்படுகின்றன. இந்த கிளைகள் மூலம் 4 கிராமிய நூற்பு மையங்களும், 5 நெசவாளர்கள் மையங்களும் செயல்பட்டு வருகின்றன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர் மற்றும் கிராம பொருட்கள் விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் 2018-2019 ஆண்டுக்கு ரூ.1 கோடியே 10 லட்சம் விற்பனை குறியீடாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதுவரை சுமார் ரூ.91 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை, தென்காசி ஆகிய ஊர்களில் கதர் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
அரசு துறைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மாத ஊதியத்தில் 10 சம தவணைகளில் பெற்றிடும் வகையில் கடனுக்கு கதர் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு அரசு ஊழியர்கள் கதர் வாரிய பொருட்களை வாங்க வேண்டும். ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கதர் துணிகளை பொதுமக்களும் வாங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கதர் அலுவலர் கோபாலகிருஷ்ணன், காதி கிராப்ட் மேலாளர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story