சங்கரன்கோவிலில் பரபரப்பு: பச்சிளம் ஆண் குழந்தை சாலையோரத்தில் வீச்சு - போலீசார் விசாரணை
சங்கரன்கோவிலில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை சாலையோரத்தில் வீசப்பட்டு கிடந்தது. குழந்தையை கைப்பற்றிய போலீசார் அதை வீசிச்சென்றது யார்? என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
சங்கரன்கோவில்,
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் டவுன் போலீஸ்காரர் அந்தோணிராஜ் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சங்கரன்கோவில் ரெயில் நிலையம் அருகே தனியார் அரிசி ஆலை பக்கத்தில் உள்ள சாலையோரத்தில் பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது.
அவர் சென்று பார்த்தபோது அங்கு பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை தொப்புள்கொடி அறுக்காத நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அந்தோணிராஜ் அந்த குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
குழந்தையை வீசிச்சென்ற கல் நெஞ்சம் கொண்ட தாய் யார்? என்பது தெரியவில்லை. அந்த குழந்தையை வளர்க்க முடியாமல் விட்டுச் சென்றார்களா? அல்லது தவறான பழக்கத்தின் மூலம் பிறந்த குழந்தை என்பதால் வீசிச்சென்றனரா? என பல்வேறு கோணங்களில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் சாலையோரத்தில் பச்சிளம் ஆண் குழந்தை வீசப்பட்ட சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story