தமிழகத்தில் மேலும் 58 இடங்களில் ரூ.18¼ கோடியில் நகரும் மருத்துவமனைகள் - அமைச்சர் நிலோபர் கபில் தகவல்


தமிழகத்தில் மேலும் 58 இடங்களில் ரூ.18¼ கோடியில் நகரும் மருத்துவமனைகள் - அமைச்சர் நிலோபர் கபில் தகவல்
x
தினத்தந்தி 3 Oct 2019 4:00 AM IST (Updated: 3 Oct 2019 3:12 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் மேலும் 58 இடங்களில் ரூ.18¼ கோடி செலவில் நகரும் மருத்துவமனைகள் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் நிலோபர் கபில் கூறினார்.

வாணியம்பாடி, 

தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் விழா வாணியம்பாடியில் நடந்தது. விழாவுக்கு தொழிலாளர் நலத்துறை ஆணையர் ரா.நந்தகோபால் தலைமை தாங்கினார். தொழிலக பாதுகாப்பு இயக்குனர் மனோகரன், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய செயலாளர் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடுதல் தொழிலாளர் ஆணையர் யாஸ்மின் பேகம் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் நிலோபர் கபில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் கட்டுமான தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாத்திட நலவாரியம் உருவாக்கப்பட்டது. இதில் உடல் உழைப்பு தொழிலாளர்கள் மற்றும் 17 வகையான பிரிவுகளில் உள்ள தொழிலாளர்கள் இணைக்கப்பட்டு உள்ளனர். இதில் 18 முதல் 60 வயதுக்குட்பட்ட தொழிலாளர்கள், 53 வகையான கட்டுமான தொழிலாளர்கள், 69 வகையான அமைப்புசாரா தொழிலாளர்களும் இந்த நலத்திட்ட உதவிகள் பெற தகுதி உடையவர் ஆகிறார்கள்.

இந்த தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பணியின் போது இறக்கும் தொழிலாளர்களுக்கு விபத்து மரண நிதியாக ரூ.5 லட்சம் வழங்க மறைந்த முதல் - அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அந்த தொகை தற்போது பணியிடத்தில் நிகழும் விபத்தில் இறந்தாலும், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பிறகு இறந்தாலும் உதவித்தொகை வழங்க முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் வெளிமாநில கட்டுமான தொழிலாளர்கள் இதுவரையில் 23 ஆயிரத்து 422 பேர் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் நகரும் மருத்துவமனைகள் இயங்கி வருகிறது. இதன் மூலம் 84 ஆயிரத்து 625 பேர் பயன் அடைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் புதிதாக 58 இடங்களில் ரூ.18¼ கோடி செலவில் நகரும் மருத்துவமனைகள் செயல்படுத்தப்பட உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 1,000 தொழிலாளர்கள் தங்கும் வகையில் காஞ்சீபுரம் மாவட்டம் எழுச்சியூர் மற்றும் தையூர் கிராமங்களில் தூங்கும் அறைகள் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார், நகர செயலாளர் சதாசிவம், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோபால், மாநில மதிப்பீட்டு செயல்பாடு குழு நிர்வாக பிரதிநிதி செந்தில்குமார், தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் ஆர்.டி.பழனி, நகர அவைத்தலைவர் சுபான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story