காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம் - கலெக்டர்கள் மரியாதை செலுத்தினர்
காந்திஜெயந்தியை முன்னிட்டு காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் கலெக்டர்கள் காந்தி உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
காஞ்சீபுரம்,
தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான நேற்று நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. காஞ்சீபுரம் சிறுகாவேரிப்பாக்கத்தில் உள்ள கதர் அங்காடி விற்பனை நிலையத்தில் காந்தியடிகள் பிறந்த நாள் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா கலந்து கொண்டு, அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த காந்தியடிகள் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி என்.சுந்தரமூர்த்தி, காஞ்சீபுரம் சப்-கலெக்டர் சரவணன், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல், காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் காந்தியடிகளின் பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் நகரமன்ற தலைவருமான ஆர்.வி.குப்பன் கலந்து கொண்டு காந்தியடிகள் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்கு 150 ஏழைகளுக்கு வேட்டி சேலைகளை ஆர்.வி. குப்பன் வழங்கினார். இந் நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் ஜே.என்.சாலையில் உள்ள கதர் அங்காடியில் நேற்று மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது உருவ படத்திற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கதர் அங்காடியில் தீபாவளி தள்ளுபடி சிறப்பு விற்பனையை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கதர் பொருட்களையும், துணிகளையும் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் காதி அங்காடி மேலாளர் ரவி, மாவட்ட குடிசைத்தொழில் ஆய்வாளர் ரங்கநாதன், பூண்டி சோப்பு வல்லுனர் துரைராஜ் மற்றும் திரளான அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்
Related Tags :
Next Story