ஊத்துக்கோட்டையில் வீட்டுமனை பட்டா கேட்டு பழங்குடியினர் தாசில்தார் அலுவலகம் முற்றுகை


ஊத்துக்கோட்டையில் வீட்டுமனை பட்டா கேட்டு பழங்குடியினர் தாசில்தார் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 3 Oct 2019 4:15 AM IST (Updated: 3 Oct 2019 3:54 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டை அருகே வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ஊத்துக்கோட்டை, 

ஊத்துக்கோட்டை அருகே உள்ள செங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட தம்புநாயுடுபாளையம் கிராமத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்த 54 குடும்பங்களை சேர்ந்தவர்கள் சுமார் 30 வருடங்களாக குடிசைகள் அமைத்து வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கப்படாத காரணத்தால், மத்திய, மாநில அரசுகள் வழங்கும் தொகுப்பு வீடுகள் மற்றும் இதர சலுகைகளை பெற முடியாமல் தவித்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், இப்பகுதி மக்கள் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஊத்துக்கோட்டை தாசில்தார் அலுவலகம் மற்றும் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.

இதனை கண்டித்து, உடனே வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

புரட்சி பாரதம் கட்சியின் மாநில தொழிற்சங்க செயலாளர் மதிவாசன் முற்றுகை போராட்டத்துக்கு தலைமை தாங்கினார். எல்லாபுரம் ஒன்றிய மாணவர் அணி தலைவர் சுபாஷ் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் கோல்ட்மணி, வக்கீல்கள் சதீஷ், பிரகாஷ், ஷ்யாம்சித்தார்தன், சுகுமார், தங்கபாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர், தாசில்தார் இளவரசியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

Next Story