மாவட்ட செய்திகள்

சேத்தியாத்தோப்பில் பயங்கரம், 3 பெண் குழந்தைகள் வாய்க்காலில் வீசி கொலை - போலீசில் தாய் சரண் + "||" + Terror in Cheethiyathuppu, 3 girls thrown into the mouth and killed

சேத்தியாத்தோப்பில் பயங்கரம், 3 பெண் குழந்தைகள் வாய்க்காலில் வீசி கொலை - போலீசில் தாய் சரண்

சேத்தியாத்தோப்பில் பயங்கரம், 3 பெண் குழந்தைகள் வாய்க்காலில் வீசி கொலை - போலீசில் தாய் சரண்
சேத்தியாத்தோப்பில் குடும்ப தகராறில் 3 பெண் குழந்தைகளை தாய் வாய்காலில் தள்ளி கொலை செய்தார். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சேத்தியாத்தோப்பு, 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35), தொழிலாளி. இவரது மனைவி சத்தியவதி(27). திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன இவர்களுக்கு அஞ்சியா(6), நந்தினி(5), தர்ஷினி(2) ஆகிய 3 பெண் குழந்தைகள் இருந்தனர். அஞ்சியா சிறுவரப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள்.

கடந்த சில நாட்களாக கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சத்தியவதி மனவேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் சத்தியவதி சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது அவர் அங்கிருந்த போலீசாரிடம், எனது கணவர் தினசரி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து என்னுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் மாலையும் வழக்கம் போல் குடித்து விட்டு என்னுடன் தகராறு செய்தார். இதனால் கோபித்துக் கொண்ட நான், எனது 3 குழந்தைகளுடன் வீட்டில் இருந்து வெளியேறினேன்.

பின்னர் எங்கு செல்வது என தெரியாமல் சாத்தப்பாடியில் இருந்து சேத்தியாத்தோப்பு செல்லும் அரசு பஸ்சில் குழந்தைகளுடன் ஏறினேன்.

சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு பேருந்து நிறுத்தம் வந்ததும் பஸ்சில் இருந்து இறங்கினேன். அங்கிருந்து சிறிது தூரம் குழந்தைகளுடன் நடந்து சென்ற போது வெள்ள ராஜன் வாய்க்கால் வந்தது. அப்போது கணவர் மீது இருந்த ஆத்திரத்தில் குழந்தைகளை கொலை செய்ய முடிவு செய்தேன். ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் இரவு 8.30 மணி வரை வாய்க்கால் அருகே அமர்ந்திருந்தேன்.

பின்னர் எனது 3 குழந்தைகளையும் ஒருவர் பின் ஒருவராக தூக்கி வாய்க்காலில் வீசினேன். அப்போது வாய்க்காலில் அதிகளவு தண்ணீர் வந்ததால் 3 குழந்தைகளையும் தண்ணீர் அடித்துச் சென்றது. இதையடுத்து விடிய விடிய வாய்க்காலின் கரையோரம் அமர்ந்து இருந்தேன். பின்னர் காலையில் தான் குழந்தைகளை கொலை செய்ததால் போலீசில் சரணடைய முடிவு செய்து இங்கு வந்தேன் என்றார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லாலுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சேத்தியாத்தோப்பு ராமதாஸ், ஆக்னிஸ்மேரி, ராஜா மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் ஆனந்தன் தலைமையிலான வீரர்கள், பொதுப்பணித்துறையினர் வெள்ள ராஜன் வாய்க்காலுக்கு விரைந்து சென்றனர்.

அங்கு சத்தியவதி தனது குழந்தைகளை தள்ளி கொலை செய்ததாக கூறிய இடத்தில் இறங்கி காலை 8 மணி முதல் தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு 9 மணி அளவில் குழந்தை அஞ்சியா உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அஞ்சியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனை தொடர்ந்து நந்தினி, தர்ஷினி ஆகியோரது உடல்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில் சத்தியவதி குழந்தைகளை வாய்க்காலில் வீசியதாக கூறிய இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் நந்தினியின் உடல் மதியம் 12 மணிக்கும், தர்ஷினியின் உடல் 1.30 மணிக்கும் மீட்கப்பட்டன.

இதையடுத்து 2 குழந்தைகளின் உடல்களும் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே இதுபற்றி அறிந்து மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள், 3 குழந்தைகளின் உடல்களையும் பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் சத்தியவதியிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப தகராறில் பெற்ற குழந்தைகளை தாய் வாய்க்காலில் வீசி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 3 பெண் குழந்தைகளை கொன்று, தம்பதி தற்கொலை, லாட்டரி மோகத்தால் ஒரு குடும்பமே சிதைந்த சோகம்
லாட்டரியில் பெருமளவில் பணத்தை இழந்ததால் சயனைடு கொடுத்து 3 பெண் குழந்தைகளை கொன்று விட்டு தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.