மேல்மலையனூர் அருகே, ஆட்டோ மீது கல்லூரி பஸ் மோதல்- பெண் பணியாளர் பலி


மேல்மலையனூர் அருகே,  ஆட்டோ மீது கல்லூரி பஸ் மோதல்-  பெண் பணியாளர் பலி
x
தினத்தந்தி 4 Oct 2019 4:00 AM IST (Updated: 3 Oct 2019 7:56 PM IST)
t-max-icont-min-icon

மேல்மலையனூர் அருகே ஆட்டோ மீது தனியார் கல்லூரி பஸ் மோதிய விபத்தில் அங்காளம்மன் கோவில் பெண் பணியாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேல்மலையனூர், 

மேல்மலையனூர் அருகே உள்ள மானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மனைவி குணசுந்தரி(வயது 37). இவர் அவலூர்பேட்டையில் தனது மகள் மகேஸ்வரியுடன், தங்கியிருந்து மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் திருவிளக்கு பணியாளராக வேலைபார்த்து வந்தார். நேற்று காலையில் குணசுந்தரி, அவலூர்பேட்டையில் இருந்து ஒரு ஆட்டோவில் மேல்மலையனூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

மேல்மலையனூர் அடுத்த கோவில்புரையூர் என்ற இடத்தில் வந்த போது மேல்மலையனூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற தனியார் கல்லூரி பஸ் ஒன்று ஆட்டோ மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த குணசுந்தரி இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த அவலூர்பேட்டை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரித்தனர். பின்னர் பலியான குணசுந்தரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story