விஜயநகரை புதிய மாவட்டமாக உருவாக்குவது குறித்து பல்லாரி எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் எடியூரப்பா ஆலோசனை


விஜயநகரை புதிய மாவட்டமாக உருவாக்குவது குறித்து பல்லாரி எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் எடியூரப்பா ஆலோசனை
x
தினத்தந்தி 4 Oct 2019 4:00 AM IST (Updated: 3 Oct 2019 10:46 PM IST)
t-max-icont-min-icon

விஜயநகரை புதிய மாவட்டமாக உருவாக்குவது குறித்து பல்லாரி மாவட்டம் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் எடியூரப்பா நேற்றுமுன்தினம் ஆலோசனை நடத்தினார்.

பெங்களூரு, 

விஜயநகரை புதிய மாவட்டமாக உருவாக்குவது குறித்து பல்லாரி மாவட்டம் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் எடியூரப்பா நேற்றுமுன்தினம் ஆலோசனை நடத்தினார். இடைத்தேர்தலுக்கு பின்பு அடுத்த கூட்டம் நடத்தி இறுதி முடிவு எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பல்லாரி 2 ஆக பிரிக்க முடிவு

கர்நாடகத்தில் பல்லாரி மாவட்டத்தை 2 ஆக பிரித்து விஜயநகரை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.வான ஆனந்த்சிங் மற்றும் அந்த மாவட்ட மடாதிபதிகள் முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கு முதல்-மந்திரி எடியூரப்பாவும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, விஜயநகரை புதிய மாவட்டமாக உருவாக்குவதற்கான பணிகளில் அரசு கவனம் செலுத்தியது.

பல்லாரி மாவட்டத்தை பிரிப்பது, விஜயநகரை புதிய மாவட்டமாக உருவாக்குவது தொடர்பான சாதக, பாதகங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி பல்லாரி மாவட்ட கலெக்டருக்கு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் விஜயநகர் மாவட்டத்தை உருவாக்குவதற்கும், பல்லாரியை பிரிக்கவும், அந்த மாவட்டத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

எடியூரப்பா ஆலோசனை

மேலும் பல்லாரி மாவட்டத்தை 2 ஆக பிரித்து விஜயநகரை புதிய மாவட்டமாக உருவாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லாரியில் கடந்த 1-ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அதே நேரத்தில் விஜயநகர் மாவட்டத்தை உருவாக்குவதற்கு ஆதரவும் உள்ளது. இதையடுத்து, பல்லாரியை பிரிப்பதா?, வேண்டாமா?, விஜயநகரை புதிய மாவட்டமாக உருவாக்குவது குறித்து பல்லாரி மாவட்டத்தை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் கருத்து கேட்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்திருந்தார்.

அதன்படி, இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் பல்லாரி மாவட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மேல்-சபை உறுப்பினர்களுடன் நேற்று முன்தினம் முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். இதில், பல்லாரி மாவட்ட பொறுப்பு மந்திரியும், துணை முதல்-மந்திரியுமான லட்சுமண் சவதி, மந்திரிகள் ஸ்ரீராமுலு, ஆர்.அசோக், தேவேந்திரப்பா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கருணாகர ரெட்டி, சோமசேகர ரெட்டி, நாகேந்திரா, பீமாநாயக், தகுதி நீக்க எம்.எல்.ஏ. ஆனந்த்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் கம்பிளி கணேஷ், துக்காரம் கலந்து கொள்ளவில்லை.

இடைத்தேர்தலுக்கு பின்பு...

இந்த கூட்டத்தில் பல்லாரி மாவட்டத்தை பிரிப்பது, விஜயநகர் மாவட்டத்தை உருவாக்குவதற்கான சாதக, பாதகங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. குறிப்பாக ரெட்டி சகோதரர்களான கருணாகர ரெட்டி, சோமசேகர ரெட்டி மற்றும் மந்திரி ஸ்ரீராமுலு ஆகியோர் பல்லாரியை பிரிக்க எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. அதே நேரத்தில் ஆனந்த்சிங் உள்ளிட்டோர் பல்லாரியை பிரித்து விஜயநகர் மாவட்டத்தை உருவாக்கியே ஆக வேண்டும் என்று கூறினார்கள். கூட்டத்தில் பல்லாரியை பிரிப்பதற்கு ஆதரவும், எதிர்ப்பும் இருந்ததால் முதல்-மந்திரி எடியூரப்பாவால் உறுதியான முடிவு எடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் டிசம்பர் 5-ந் தேதி பல்லாரி மாவட்டம் ஒசப்பேட்டே உள்ளிட்ட 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனால் இடைத்தேர்தலுக்கு பின்பு மீண்டும் பல்லாரி மாவட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மடாதிபதிகளுடன் ஆலோசிப்பது என்றும், அந்த மாவட்டத்தை சேர்ந்த அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்டு இறுதி முடிவு எடுக்கலாம் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்தார். இதையடுத்து, நேற்றுமுன்தினம் நடந்த கூட்டத்தில் பல்லாரியை பிரிப்பது, விஜயநகர் மாவட்டத்தை உருவாக்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

விரிவாக ஆலோசித்து முடிவு

ஆலோசனை கூட்டம் முடிந்ததும் மந்திரி ஸ்ரீராமுலு நிருபர்களிடம் கூறியதாவது:-

பல்லாரி மாவட்டத்தை 2 ஆக பிரிப்பது குறித்தும், விஜயநகரை புதிய மாவட்டமாக உருவாக்குவது தொடர்பான சாதக, பாதகங்கள் தொடர்பாகவும் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கருத்துகளை முதல்-மந்திரியிடம் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் இடைத்தேர்தலுக்கு பின்பு பல்லாரி மாவட்டத்தை 2 ஆக பிரிப்பது குறித்து விரிவாக ஆலோசித்து முடிவு எடுக்கலாம் என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார். அவர் எடுத்துள்ள முடிவை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளோம்.

மாநிலத்தில் நிலம், மொழி பிரச்சினையில் இதற்கு முன்பு திடமான முடிவுகளை எடியூரப்பா தெரிவித்துள்ளார். எந்த விதமான பிரச்சினையாக இருந்தாலும், அதில், சரியான முடிவை எடுக்கும் திறமை அவருக்கு உள்ளது. இடைத்தேர்தலுக்கு பின்பு பல்லாரி மாவட்டத்தை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மடாதிபதிகளின் கருத்துகளை கேட்க மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் பல்லாரியை பிரிப்பதா? வேண்டாமா? என்பது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story