அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் ‘திடீர்’ விரிசல் சென்னை ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்


அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் ‘திடீர்’ விரிசல் சென்னை ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்
x
தினத்தந்தி 4 Oct 2019 4:30 AM IST (Updated: 3 Oct 2019 10:54 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் ‘திடீர்’ விரிசல் ஏற்பட்டதால் சென்னை செல்லும் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

அரக்கோணம்,

சென்னையில் இருந்து வேலூர் மாவட்டம் அரக்கோணம் வழியாக தமிழகத்தின் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கும் அதிக அளவில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சென்று வருகின்றன. இரட்டை ரெயில்பாதை இந்த வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை நோக்கி ரெயில்கள் செல்லும் தண்டவாள பகுதியில் ரெயில்வே சிப்பந்திகள் நேற்று காலை வழக்கம்போல் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அவர்கள் மகேந்திரவாடி ரெயில் நிலையம் அருகே காலை 6.55 மணியளவில் சென்றபோது தண்டவாளத்தில் ‘திடீர்’ விரிசல் ஏற்பட்டிருந்ததை கண்டறிந்தனர். இதுகுறித்து உடனடியாக அவர்கள் அருகே உள்ள அரக்கோணம் மற்றும் சோளிங்கபுரம் ரெயில் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சோளிங்கபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்ட இடத்துக்கு விரைந்து வந்து அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அந்த நேரத்தில் சென்னை நோக்கி வந்த திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ், லால் பாக் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன. காலை நேரம் என்பதால் இந்த ரெயில்களில் வேலைக்காக சென்னைக்கு வரும் ஜோலார்பேட்டை, ஆம்பூர், காட்பாடி பகுதியை சேர்ந்தவர்கள் தவிப்புக்குள்ளாயினர். இதேபோல் காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகளும் அவதிப்பட நேர்ந்தது.

இந்த நிலையில் ஒரு மணி நேரத்துக்கு பின்னர் தண்டவாளம் சீரமைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ரெயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன. உரிய நேரத்தில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதால் விபரீதம் தவிர்க்கப்பட்டது.

இது குறித்து காட்பாடி ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story