அ.தி.மு.க. வெற்றி பெற்றால் தான் விக்கிரவாண்டி தொகுதி வளர்ச்சி பெறும் - துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு
அ.தி.மு.க. வெற்றி பெற்றால் தான் விக்கிரவாண்டி தொகுதி வளர்ச்சி பெறும் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.
விழுப்புரம்,
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காணையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சட்டசபை துணை சபாநாயகரும், காங்கியனூர், பள்ளியந்தூர், மாம்பழப்பட்டு, கோழிப்பட்டு, மல்லிகைப்பட்டு, டட்நகர் ஆகிய ஊராட்சிகளின் தேர்தல் பொறுப்புக்குழு தலைவருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
விக்கிரவாண்டி தொகுதி அ.தி.மு.க.வின் அசைக்க முடியாத கோட்டை. இந்த தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் குறைந்தது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வனை வெற்றி பெற வைக்க வேண்டும்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிர்பாராத பின்னடைவு ஏற்பட்டது. தமிழக மக்களை ஏமாற்றி பொய் பிரசாரம் செய்து தி.மு.க. வெற்றி பெற்று விட்டது. அந்த தவறை மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர். தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சி செய்ய வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அதற்கு முன்னோட்டமாக நடைபெற உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய 2 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும். அதற்காக நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய 2 தலைவர்களும் இந்த இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தி கொண்டிருப்பதோடு ஏழை, எளிய மக்களுக்காக சேவை செய்து வருகின்றனர். இந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால்தான் விக்கிரவாண்டி தொகுதி வளர்ச்சி பெறும். தொகுதி மக்களுக்கு தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு முன்னேற்ற பணிகள் நிறைவேற்றி தரப்படும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் தியாகதுருகம் ஒன்றிய செயலாளர் அய்யப்பன், கண்டமங்கலம் முன்னாள் ஒன்றிய செயலாளர் கண்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் வண்டிமேடு ராமதாஸ், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் கோல்டுசேகர், நிர்வாகிகள் திருப்பதிபாலாஜி, நூர்ஜியாவுதீன், சம்சுதீன்சேட், விஜயகுமார், தயாநிதி, மின்னல்சவுக், மூர்த்தி, தேவா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story