குஜிலியம்பாறை அருகே, ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய நீரில் சிக்கிய பஸ்


குஜிலியம்பாறை அருகே, ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய நீரில் சிக்கிய பஸ்
x
தினத்தந்தி 4 Oct 2019 3:30 AM IST (Updated: 4 Oct 2019 12:48 AM IST)
t-max-icont-min-icon

குஜிலியம்பாறை அருகே ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் தனியார் மில் பஸ் சிக்கியது.

குஜிலியம்பாறை, 

குஜிலியம்பாறை அருகே புளியம்பட்டி-ஆர்.பி.பில்லமநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதையில் மழை நீர் அடிக்கடி தேங்கி நிற்பதால் வேலாயுதகவுண்டனூர், ஆர்.பி.பள்ளபட்டி, கூம்பூர், கருங்குளம், செட்டியூர், கொண்டமநாயக்கனூர், ஈசநத்தம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் பெய்த மழையில், இந்த ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. நேற்று அந்த சுரங்கபாதை வழியாக வேடசந்தூரில் இருந்து வந்த தனியார் மில் பஸ் தேங்கி நின்ற மழை நீரில் சிக்கி கொண்டது. மேலும் பஸ்சின் என்ஜின் பகுதிக்குள் தண்ணீர் சென்றதால் பஸ்சை இயக்க முடியவில்லை.

பஸ்சில் பணியாளர்கள் யாரும் இல்லாததால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இதன் பின்பு மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு பஸ் அங்கிருந்து வெளியே கொண்டு வரப்பட்டது. அந்த சுரங்கப்பாதையில் தொடர்ந்து தண்ணீர் தேங்கி நிற்பதால் சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள் ஆபத்தான முறையில் ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்.

பெரிய அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காதவாறு முன்பகுதியில் மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ரெயில்வே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போராட்டம் நடத்தப் போவதாக பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.

Next Story