மணல் அள்ள அனுமதி வழங்கக்கோரி மாடுகளுடன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் - கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது
மணல் அள்ள அனுமதி வழங்கக்கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி,
புதுவை மற்றும் தமிழக பகுதியில் உள்ள ஆற்றுப்படுகையில் புதுவையை சேர்ந்த 100-க்கும் அதிகமான மாட்டு வண்டி தொழிலாளர்கள் அனுமதியின்றி மணல் எடுத்து பல ஆண்டுகளாக விற்பனை செய்து வந்தனர்.
இந்தநிலையில் அரசு வருவாய் துறை, காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மணல் அள்ளி வரும் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் குற்ற வழக்குகளும் பதிவு செய்யப்படுகின்றன.
இதற்கு மாட்டு வண்டி தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதுவையில் மாட்டு வண்டியில் மணல் எடுக்கும் தொழிலை அரசு முறைப் படுத்த வேண்டும். சட்டபூர்வமாக மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி. மாட்டுவண்டி தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் அர்ஜுன், செயலாளர் சேதுசெல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர். போராட்டத்தினை ஏ.ஐ.டி.யு.சி. செயல் தலைவர் அபிஷேகம் தொடங்கி வைத்தார். இதில் ஈடுபட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் மாடுகளுடன் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் தண்டபாணி, பிரகாஷ், பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story