ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலைக்கு சிறப்பு பூஜை


ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலைக்கு சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 4 Oct 2019 3:30 AM IST (Updated: 4 Oct 2019 2:02 AM IST)
t-max-icont-min-icon

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோவில் நடராஜர் சிலைக்கு நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது.

அம்பை, 

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் அறம்வளர்த்த நாயகி சமேத குலசேகரமுடையார் கோவில் உள்ளது. பழமையான இந்த கோவிலில் கடந்த 1982-ம் ஆண்டு ஐம்பொன்னால் செய்யப்பட்ட நடராஜர் உள்ளிட்ட 4 சாமி சிலைகள் திருடப்பட்டது. மாயமான சிலைகள் குறித்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர முயற்சியில் நடராஜன் சிலை ஆஸ்திரேலியாவில் இருப்பது தெரியவந்தது.

பின்னர் முறையான அனுமதி பெற்று அங்கு இருந்து கடந்த 24-ந் தேதி கல்லிடைக்குறிச்சிக்கு சிலை கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் 37 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோவிலில் எழுந்தருளிய நடராஜர் சிலைக்கு அனைத்து மக்களும் எல்லாவிதமான நன்மைகள் பெற வேண்டும் என்று சிறப்பு பூஜைகள், யாக வேள்விகள், சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி நேற்று மாலை 5 மணிக்கு நடராஜர் சிலைக்கு அனுக்ஞை பூஜை, விக்னேசுவர பூஜை, பஞ்சகவ்யபூஜை, 1008 கலசபூஜை, சாந்தி ஹோமம், தீபாராதனைகள் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை 5 மணிக்கு மங்கள இசை, 1008 கலச பூஜை, 2-ம் கால பூஜை, ஹோமம் நடக்கிறது. 10 மணிக்கு மேல் திருமுறை பாராயணம், மகா அபிஷேகம், 1008 கலச அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள், மாலையில் சுவாமி வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.


Next Story