பஞ்சாயத்து அலுவலகத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு: கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
பஞ்சாயத்து அலுவலகத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியை அடுத்த இனாம் மணியாச்சியைச் சேர்ந்த பொதுமக்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து தலைமையில், கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
பின்னர் அவர்கள், யூனியன் ஆணையாளர் மாணிக்கவாசகத்திடம் கோரிக்கை மனு வழங்கினர்.
அந்த மனுவில், கோவில்பட்டி யூனியன் இனாம் மணியாச்சி பஞ்சாயத்தில் இனாம் மணியாச்சி, ஆலம்பட்டி, அத்தைகொண்டான், சுபா நகர், சீனிவாச நகர், இந்திரா நகர், லட்சுமி மில் காலனி, சாலைப்புதூர், தெற்கு கங்கன்குளம், கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் 25 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இனாம் மணியாச்சியில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கிருஷ்ணா நகரில் ரூ.15 லட்சம் செலவில் பஞ்சாயத்து அலுவலகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. எனவே இனாம் மணியாச்சியில் செயல்படும் பஞ்சாயத்து அலுவலகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். இனாம் மணியாச்சி பஞ்சாயத்து அலுவலகத்தை கிருஷ்ணா நகருக்கு இடமாற்றம் செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் உமாசங்கர், மாவட்ட குழு உறுப்பினர் தினேஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் மல்லிகா, ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், கிளை தலைவர் ஆனந்த், செயலாளர் கருத்தப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story