நாங்குநேரி தொகுதியில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் திடீர் போராட்டம்
நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட வடக்கு விஜய நாராயணத்தில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் திடீரென போராட்டம் நடத்தினர்.
இட்டமொழி,
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட வடக்கு விஜயநாராயணத்தில் உள்ளது பெரிய குளம்.
இந்த குளத்தில் தற்போது தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் ரூ.2 கோடி செலவில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.ஆனால், இந்த தொகை குளம் பராமரிப்பு பணிக்கு போதாது எனவும், அரசு நிர்ணயித்த தொகையான ரூ.15 கோடியை உடனே ஒதுக்கீடு செய்து, பணிகளை முடிக்க வேண்டும் என்று கூறியும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதி விவசாயிகள் குளத்து மடையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் அதிகாரிகள் கூடுதல் நிதி பெற்றுத்தர எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், நடைபெற உள்ள நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story