நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் பணப்பலத்தை எதிர்த்து வெற்றி பெறுவோம்: கே.எஸ்.அழகிரி பேட்டி


நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் பணப்பலத்தை எதிர்த்து வெற்றி பெறுவோம்: கே.எஸ்.அழகிரி பேட்டி
x
தினத்தந்தி 3 Oct 2019 10:15 PM GMT (Updated: 3 Oct 2019 8:34 PM GMT)

நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் பணப்பலத்தை எதிர்த்து வெற்றி பெறுவோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். இதுகுறித்து அவர் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை, 

பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. சென்னை கடற்கரை சாலையில் அவரது சிலை சுத்தம் செய்யாமல் இருந்தது கண்டிக்கத்தக்கது.

இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு வருவது இல்லை. ஆனாலும் நாங்கள் அவர்களை அழைத்து இருக்கிறோம். செய்தி தொடர்பாளர் குஷ்பு பிரசாரத்துக்கு வருவார்.

அ.தி.மு.க.வின் ஊழல் ஆட்சியை அகற்ற வேண்டும். சாதி, மதம், மொழிவாரியாக பிரிக்கும் மத்திய அரசின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும். நாங்குநேரி தொகுதிக்கு எங்கள் வேட்பாளர் தொடர்ந்து பாடுபடுவார் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரசாரம் செய்வோம்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 19 கொலைகள் நடந்துள்ளன.

திருச்சியில் உள்ள ஒரு நகைக்கடையில் ரூ.13 கோடி நகை கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது. இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆளும் கட்சியின் பணப்பட்டுவாடாவை எதிர்த்து சத்தியம், லட்சியம் என்ற கொள்கை ரீதியில் நாங்கள் மக்களிடம் பிரசாரம் செய்வோம். கூட்டணி கட்சிகளோடு இணைந்து வாக்குசேகரித்து வருகிறோம். அ.தி.மு.க.வின் பணப்பலத்தை எதிர்த்து நாங்குநேரி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம்.

உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு தமிழக அரசு அச்சப்படுகிறது. இந்த தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்று அ.தி.மு.க. பயப்படுகிறது. அதனால் அவர்கள் தேர்தல் தேதியை அறிவிக்காமல் காலம் தாழ்த்துகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத், முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், நாங்குநேரி தொகுதி வேட்பாளர் ரூபி மனோகரன், மாவட்ட தலைவர்கள் சங்கரபாண்டியன் (மாநகர்), எஸ்.கே.எம்.சிவக்குமார் (கிழக்கு), சக்தி திட்ட ஒருங்கிணைப்பாளர் வி.பி.துரை மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story