தாராபுரம் அருகே சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
தாராபுரம் அருகே குடிநீருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தேங்காய்நார் நிறுவனத்தை மூடக்கோரி சப்-கலெக்டர் அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டனர்.
தாராபுரம்,
தாராபுரம் அருகே உள்ள வலசுபாளையம் கிராமத்தில், தனியாருக்குச் சொந்தமான தேங்காய்நார் உற்பத்தி செய்யும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் பயன்படுத்தும் தண்ணீரால் அருகே உள்ள விவசாய கிணறுகளும், குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளும் மாசடைந்து வருவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து நேற்று வலசுபாளையம், சொக்கநாதபுரம், வெங்கிக்கல்பாளையம், புங்கந்துறை ஆகிய கிராமங்களைச்சேர்ந்த பொதுமக்கள், தனியாருக்குச் சொந்தமான தேங்காய்நார் உற்பத்தி நிறுவனத்தை, உடனே மூடக்கோரி, சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இது குறித்து முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-
வலசுபாளையத்தில் உள்ள குளத்துதோட்டத்தில், இரண்டு நபர்களுக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அவர்கள் தேங்காய்நார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைத்துள்ளனர். தேங்காய்நார் உற்பத்தி செய்யப்பட்ட பிறகு, அதிலிருந்து கிடைக்கும் நார் துகள்களை மதிப்புக்கூட்டுவதற்காக பல்வேறு வகையான பொருட்கள் செய்யப்படுகிறது. இதற்காக நார் துகள்களை 10 ஏக்கர் நிலத்தில் திறந்தவெளியில், சுமார் அரை அடி உயரத்திற்கு பரப்பிவைக்கிறார்கள்.
பிறகு அதன் மீது பல லட்சம் லிட்டர் தண்ணீரை ஊற்றி ஊரவைத்து, பிறகு அவைகள் வெயிலில் காயவைக்கப்படுகிறது.நார்துகள்கள் மீது ஊற்றப்படும் தண்ணீர், பூமிக்கு அடியில் என்று நிலத்தடி நீருடன் கலந்து விடுகிறது.
இதனால் வலசுபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாய கிணறுகள் மாசடைந்து வருகிறது. கிணற்றுத் தண்ணீர் சிவப்பு நிறமாக மாறிவிட் டது. அதேபோல் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளிலும் குடிநீர் மாசடைந்து விட்டது. இதனால் கிராம மக்கள் குடிநீர் தேடி வேறு பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் திறந்த வெளியில் நார்துகள்களை காயவைப்பதால், நார்துகள்கள் காற்றில் பறந்துவந்து, அப்பகுதி முழுவதும் நிரம்பி இருக்கிறது.
இதனால் பொது மக்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே எங்கள் பகுதியில் உள்ள தனியார் தேங்காய்நார் உற்பத்தி நிறுவனத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி முற்றுகையிட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், முற்றுகையில் ஈடுபட்டவர்களை அழைத்து, மனுக்கொடுக்கும் படி கேட்டுக்கொண்டனர். இதையடுத்து கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு, தனியார் தேங்காய்நார் உற்பத்தி நிறுவனத்தை மூடக்கோரி சப்-கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story