ரெயில்வே மந்திரி பியூஸ்கோயல் வீட்டில் வெள்ளி பொருட்கள், பணம் திருட்டு வேலைக்காரர் கைது


ரெயில்வே மந்திரி பியூஸ்கோயல் வீட்டில் வெள்ளி பொருட்கள், பணம் திருட்டு வேலைக்காரர் கைது
x
தினத்தந்தி 3 Oct 2019 10:30 PM GMT (Updated: 3 Oct 2019 9:53 PM GMT)

மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ்கோயல் வீட்டில் வெள்ளி பொருட்கள், பணம் திருடியதாக வேலைக்காரர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

மும்பை, 

மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ்கோயல் வீட்டில் வெள்ளி பொருட்கள், பணம் திருடியதாக வேலைக்காரர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

மந்திரி பியூஸ்கோயல் வீட்டில் திருட்டு

மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ்கோயலின் வீடு தென்மும்பை நேப்பியன் சீ ரோடு பகுதியில் உள்ளது. மும்பையில் இருந்து மந்திரி பியூஸ்கோயல் கடந்த மாதம் 16-ந் தேதி டெல்லி சென்றார். மறுநாள் அவரது மனைவி சீமாவும் டெல்லி செல்ல இருந்தார்.

இந்தநிலையில், அவர்களது வீட்டு படுக்கையறையில் இருந்த வெள்ளியிலான கலைப்பொருட்கள், விலை உயர்ந்த கைக்கெடிகாரங்கள், ஆடைகள், செல்போன்கள் மற்றும் பணம் உள்ளிட்டவை காணாமல் போயிருந்தன.

இதை பார்த்த பியூஸ்கோயலின் மனைவி அதிர்ச்சி அடைந்தார்.

வேலைக்காரர் கைது

இதுகுறித்து வீட்டு வேலைக்காரர்களிடம் விசாரித்தார். அப்போது, விஷ்ணுகுமார் விஸ்வகர்மா(வயது 30) என்ற வேலைக்காரர் மாயமாகி இருந்தார். அவரது செல்போனும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. எனவே அவர் மீது சந்தேகம் எழுந்தது. மத்திய மந்திரி வீட்டில் நடந்த இந்த துணிகர திருட்டு சம்பவம் குறித்து பியூஸ்கோயலின் மேலாளர் பிரகாஷ் ஷெட்கே, காம்தேவி போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், விஷ்ணுகுமார் விஸ்வகர்மா டெல்லியில் தலைமறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த திருட்டு பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்றுமுன்தினம் அவர் விசாரணைக்காக மும்பை கொண்டு வரப்பட்டார்.

இ-மெயில் அழிப்பு

விசாரணையின் போது, அவர் கடந்த 4 மாதத்திற்கு முன்னர் தான் மந்திரி பியூஸ்கோயல் வீட்டில் வேலைக்கு சேர்ந்தது தெரியவந்தது. மந்திரி பியூஸ்கோயல் வீட்டில் உள்ள கணினியில் இருந்து விஷ்ணுகுமார் விஸ்வகர்மா அடையாளம் தெரியாத சிலருக்கு சில இ-மெயில்களை அனுப்பி உள்ளார். பின்னர் அவற்றை அழித்து இருந்தது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாகவும் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர் இ-மெயில் மூலம் யாருக்கு, என்ன தகவல்களை அனுப்பினார் என்பதை கண்டுபிடிக்க சைபர் குற்றப்பிரிவு போலீசார் உதவியை நாடி உள்ளனர்.

Next Story