சங்ககிரி அருகே, ஆரம்ப சுகாதார நிலையத்தில் 6 வயது சிறுமிக்கு கொடுத்த மாத்திரையில் இரும்பு கம்பி


சங்ககிரி அருகே, ஆரம்ப சுகாதார நிலையத்தில் 6 வயது சிறுமிக்கு கொடுத்த மாத்திரையில் இரும்பு கம்பி
x
தினத்தந்தி 4 Oct 2019 3:45 AM IST (Updated: 4 Oct 2019 3:33 AM IST)
t-max-icont-min-icon

சங்ககிரி அருகே புள்ளிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 6 வயது சிறுமிக்கு கொடுத்த மாத்திரையில் இரும்பு கம்பி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சங்ககிரி, 

சங்ககிரி அருகே மோரூர் மேற்கு ஊராட்சி தேவேந்திர தெருவில் உள்ள பொதுமக்கள், பருவநிலை மாற்றம் காரணமாக சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் புள்ளிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று சளி மற்றும் காய்ச்சலுக்கு புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

குறிப்பாக நேற்று முன்தினம் தேவேந்திர தெருவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகள் மகாநிஷா (வயது 6) என்ற சிறுமிக்கு காய்ச்சல், சளி காரணமாக ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்கு அழைத்து வந்து டாக்டர் தனசேகரனிடம் காண்பித்தனர். அப்போது அவர் சிறுமியை பரிசோதித்து ஊசி மற்றும் மருந்து மாத்திரைகளை வழங்கினார்.

பிறகு கோபாலகிருஷ்ணன் தனது மகளை வீட்டுக்கு அழைத்து சென்று, ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்பட்ட மாத்திரையை அவளுக்கு வழங்க அதை இரண்டாக உடைத்தார். அப்போது மாத்திரையின் உள்ளே சிறிய இரும்பு கம்பி இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அதனை குழந்தைக்கு வழங்காமல் அப்படியே எடுத்து கொண்டு ஊர் பொதுமக்கள் 20-க்கும் மேற்பட்டோரை அழைத்து கொண்டு புள்ளிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்தார். அங்கு அவர்கள் அந்த மாத்திரையை டாக்டரிடம் காண்பித்து புகார் தெரிவித்தனர்.

பின்னர் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களை அழைத்து டாக்டர் பேசினார். அப்போது உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story