தர்மபுரி மாவட்டத்தில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு - அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை


தர்மபுரி மாவட்டத்தில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு - அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 3 Oct 2019 10:45 PM GMT (Updated: 3 Oct 2019 10:04 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 11 பேருக்கு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தர்மபுரி, 

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பொதுமக்களிடையே காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளது. மாவட்ட கலெக்டர் மலர்விழி உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வருவோருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் பலர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியானது.

இதுதொடர்பாக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சீனிவாசராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளது. தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு பிரிவில் உள்நோயாளிகளாக 230 பேர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். புறநோயாளிகள் பிரிவில் தினமும் 250 பேர் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வந்து செல்கிறார்கள்.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ள 4 சிறுவர்கள் உள்பட 11 பேர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்களின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக சுகாதாரத்துறை இயக்குனர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து தர்மபுரி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு பின் கண்காணிப்பு என்ற சிறப்பு மருத்துவப்பிரிவு தற்போது தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பிரிவு 24 மணிநேரமும் தொடர்ந்து செயல்படுகிறது. தொடர் காய்ச்சல் பாதிப்பு இருப்பவர்கள் குணமான பின்னரும் 72 மணிநேரம் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுகிறார்கள். காய்ச்சல் சிகிச்சை பிரிவில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருந்துகள், சோதனை கருவிகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.

காய்ச்சலுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் சிறப்பு மருத்துவ சிகிச்சைக்கான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. நிலவேம்பு கசாயம், உப்புகரைசல் கஞ்சி ஆகியவற்றை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று உரிய சிகிச்சை பெற வேண்டும்.

தாங்களாகவே மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள மருந்து விற்பனை நிலையங்களில் டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் காய்ச்சலுக்கான மருந்துகளை வழங்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story