எலச்சிபாளையத்தில், பட்டப்பகலில் வீட்டு பூட்டை உடைத்து 11 பவுன் நகை, பணம் திருட்டு


எலச்சிபாளையத்தில், பட்டப்பகலில் வீட்டு பூட்டை உடைத்து 11 பவுன் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 4 Oct 2019 4:00 AM IST (Updated: 4 Oct 2019 3:34 AM IST)
t-max-icont-min-icon

எலச்சிபாளையத்தில், பட்டப்பகலில் வீட்டு பூட்டை உடைத்து 11 பவுன் நகை, பணம் திருட்டு போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எலச்சிபாளையம், 

திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையம் ஆசிரியர் காலனியில் வசித்து வருபவர் ஸ்ரீதர் (வயது 45). இவர் எலச்சிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ளார். இவரும், இவரது மனைவி உமாமகேஸ்வரியும் நேற்று காலை சுமார் 10.30 மணிக்கு வழக்கம்போல் ஸ்டூடியோவுக்கு சென்று விட்டனர்.

மதியம் சுமார் ஒரு மணியளவில் கணவன், மனைவி இருவரும் ரேஷன் கடைக்கு சென்று விட்டு மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்தபோது வீட்டின் வெளிக்கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டனர். அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடப்பதை கண்டனர்.

பீரோவுக்குள் வைத்திருந்த 11 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருப்பதை அறிந்தனர். இதுகுறித்து ஸ்ரீதர் எலச்சிபாளையம் போலீசில் புகார் செய்தார்.

இதன்பேரில் இன்ஸ்பெக்டர் பழனியப்பன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு வந்து தீவிர விசாரணை செய்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்து சென்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story