மாவட்டத்தில் ரூ.62½ லட்சத்திற்கு கதர் துணிகள் விற்க இலக்கு - கலெக்டர் மெகராஜ் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.62½ லட்சம் மதிப்பிலான கதர் துணிகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் மெகராஜ் தெரிவித்தார்.
நாமக்கல்,
தீபாவளியை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கதர் சிறப்பு விற்பனை தொடக்கவிழா நடந்தது. விழாவுக்கு கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு முன்னிலை வகித்தார். இதில் கலெக்டர் மெகராஜ், காந்தியடிகளின் உருவப்படத்தை திறந்து வைத்ததோடு, கதர் சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்து, கதர் விற்பனை நிலையத்தை பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்திற்கு கதர் சிறப்பு விற்பனையை பொறுத்தவரை ரூ.62 லட்சத்து 50 ஆயிரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ரூ.80 லட்சத்திற்கு மேல் கதர் விற்பனை செய்ய முடியும் என கூறி உள்ளனர். அதற்கு எனது பாராட்டுக்கள்.
நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரு விற்பனை நிலையம் செயல்பட உள்ளதோடு, சேந்தமங்கலம் மற்றும் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் கதர் துணிகள் விற்பனை செய்யப்படும். பொதுமக்களும், அரசு அலுவலர்களும் இதற்கு பெரிய அளவில் ஆதரவு அளித்து, இந்த தொழிலில் ஈடுபட்டு உள்ள மக்களின் வாழ்வாதாரம் முன்னேற வழிவகை செய்யவேண்டும்.
தற்போது மழைக்காலம் என்பதால் ஆறு, வாய்க்கால்களில் தண்ணீர் செல்கிறது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள சிறுபாசன ஏரிகள், குளம் மற்றும் குட்டைகள் என 200-க்கும் மேற்பட்டவை தூர் வாரப்பட்டுள்ளது. பல பணிகள் முடிவடைந்துள்ளது. இதனால் குட்டைகளிலும், சிறுபாசன ஏரிகளிலும் தண்ணீர் தேங்கி உள்ளது.
அதில் ஒரு சில இடங்கள் ஆபத்தான பகுதிகளாக உள்ளன. அங்கு சிறுவர்கள் விளையாடவோ, குளிக்கவோ செல்லும்போது பெரிய அளவில் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதுகுறித்து வருவாய்த்துறையினரும், போலீசாரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். எனவே சிறுவர்கள் பாதுகாப்பான பகுதிகளில் பெற்றோர்கள் மற்றும் வயதில் மூத்தவர்களுடன் சென்றுதான் குளிக்கவேண்டும். ஆபத்தான இடங்களில் நின்றுக்கொண்டு செல்பி எடுப்பதை தவிர்க்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் நாமக்கல் மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் டாக்டர் மணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, நாமக்கல் தாசில்தார் பச்சமுத்து, தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரிய கண்காணிப்பாளர் மருதவேல், மேலாளர் தாரசவுத்திரி, செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், உதவி செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் மோகன்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story