கடலூரில், கரும்பு விவசாயிகள் காத்திருக்கும் போராட்டம்
கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
கடலூர்,
கரும்பு விவசாயிகளுக்கு நடப்பு ஆண்டுக்கான ஊக்கத்தொகையை தீபாவளி பண்டிகைக்கு முன்பாக வழங்க வேண்டும், கரும்புக்கான கொள்முதல் நிலுவை தொகையை சர்க்கரை ஆலைகளிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் அறிவித்து இருந்தது.
அதன்படி கடலூர் புதிய கலெக்டர் அலுவலகம் எதிரில் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு நிர்வாகிகள் தென்னரசு, ஜெயபால், முத்தமிழ் செல்வன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். பொதுச்செயலாளர் ரவீந்திரன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாதவன், மாநில துணைத்தலைவர் ரவிச்சந்திரன், விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று பிற்பகலில் போராட்டக்காரர்களுடன் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) மாரியப்பன், வேளாண்மை இணைஇயக்குனர் முருகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தையின் போது, நடப்பு ஆண்டுக்கான ஊக்கத்தொகையை தீபாவளி பண்டிகைக்கு முன்பதாக வாங்கித்தர நடவடிக்கை எடுப்பதாகவும், அம்பிகா சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்பு சுமார் 6 கோடி ரூபாய் வழங்க ஏற்பாடு செய்வதாகவும் அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தை மாலையில் கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story