வீட்டில் தனியாக இருந்த, சிறுமியை பலாத்காரம் செய்த என்ஜினீயரிங் மாணவருக்கு 7 ஆண்டு சிறை


வீட்டில் தனியாக இருந்த, சிறுமியை பலாத்காரம் செய்த என்ஜினீயரிங் மாணவருக்கு 7 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 4 Oct 2019 11:00 PM GMT (Updated: 4 Oct 2019 4:51 PM GMT)

வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த என்ஜினீயரிங் மாணவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மகிளா கோர்ட் அதிரடி தீர்ப்பை வழங்கியது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா வயலப்பாடி கீரனூர் நடுத் தெருவை சேர்ந்தவர் ஐஸ் என்கிற மதியழகன். இவரது மகன் கருப்பையா (வயது 20). இவர் அரியலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயர் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். 

இந்த நிலையில் அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 4-ந் தேதி ஒரு வீட்டிற்குள் அத்துமீறி உள்ளே புகுந்து, அங்கு தனியாக இருந்த 17 வயதுடைய சிறுமியை மிரட்டியும், கட்டாயப்படுத்தியும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து நடந்த சம்பவத்தை யாரிடம் கூறினால் கொலை செய்து விடுவதாக அந்த சிறுமியை கருப்பையா மிரட்டினாராம். 

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி தனக்கு நடந்த சம்பவத்தை வீட்டிற்கு வந்த தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து அந்த சிறுமியின் தாய் இது தொடர்பாக பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கருப்பையாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் கருப்பையா ஜாமீனில் வெளியே வந்தார். இது தொடர்பாக வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.

நேற்று இந்த வழக்கை விசாரித்த மகிளா கோர்ட்டு நீதிபதி மலர்விழி தீர்ப்பு அளித்தார்.இதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கருப்பையாவுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மலர்விழி அதிரடி தீர்ப்பை வழங்கினார். இந்த வழக்கில் மகிளா கோர்ட்டு அரசு தரப்பு வக்கீல் வினோத்குமார் ஆஜராகி வாதாடினார். இதையடுத்து கருப்பையாவை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story