பெரம்பலூரில், டெங்கு கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்


பெரம்பலூரில், டெங்கு கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 Oct 2019 3:30 AM IST (Updated: 4 Oct 2019 10:28 PM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் அதிகரித்து வரும் டெங்கு கொசுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்தி,நிலவேம்பு கசாயம் வழங்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் கடந்த ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி முதல் கடந்த ஒருவாரம் முன்பு வரை தொடர்ந்து மழைபெய்துள்ளது. இதனால் பெரம்பலூர் 4, 5, 6, 7-வது வார்டுகள் மற்றும் துறைமங்கலத்தில் உள்ள 8-வது வார்டுகளில் காலியாக வைக்கப்பட்டுள்ள வீட்டு மனைகளில் புல், பூண்டுகளும், முட்புதர்களும் அதிகமாக வளர்ந்துள்ளன. மேலும் தேங்காய் சிரட்டைகள், வாகன டயர்கள் உள்ளிட்டவைகளில் மழைநீர் தேங்கி டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிவிட்டன. 

இதேபோல துறைமங்கலம் அவ்வையார் தெரு, சங்குப்பேட்டை, ரோவர் சாலையில் உள்ள அக்ரி நகர், வெங்கடேசபுரம் காலனி, பெரிய தெற்குத்தெரு ஆகிய பகுதிகளிலும் இதே நிலை காணப்படுகிறது. குறிப்பிட்டுள்ள வார்டு பகுதியில் உள்ள தெருக்களில் டெங்கு கொசுக்கள் உற்பத்தி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிகவும் அதிகரித்துவிட்டதால், கொசுக்கள் படைபடையாக வீடுகளுக்குள் புகுந்து, அலமாரியில் வைக்கப்பட்டுள்ள துணிகளின் மேல் தங்கிக்கொண்டு பகலிலும், இரவிலும் பொதுமக்களை கடித்து தூங்கவிடாமல் செய்துவருகிறது.

இந்த நிலையில் டெங்குவை ஒழிக்கும் கொசு மருந்து தெளிக்கப்பட்டாலும் டெங்கு கொசுக்களை ஒழிக்கமுடியவில்லை. இப்பகுதியில் முட்புதர்களை அகற்றிடவும், சுகாதாரப்பணிகளை மேற்கொள்வதிலும் நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக ரோவர் சாலை குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தனர். அபேட் ரக மருந்தை நீரில் கலந்து தெளிப்பதன் வாயிலாக டெங்கு கொசு உற்பத்தியை அதன் புழு (லார்வா) பருவத்திலேயே அழிக்கமுடியும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தாலும், டெங்கு வைரசை பரப்பி நோய்தாக்குதலுக்கு உள்ளாக்கிவரும் கொசுக்களை அழிக்கமுடியவில்லை. 2016 ஆண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 2 பேர் பலியாகினர்.

இதனை தொடர்ந்து 2017-ம் ஆண்டில் நகராட்சி பகுதியில் 4, 6, 7 ஆகிய வார்டுகளில் ஏறத்தாழ 30-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று உடலில் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்த நிலையில் வீடுகளுக்கு திரும்பினர். கடந்த ஆண்டு பெரம்பலூரில் முத்துநகர் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர், மருத்துவ மாணவர் உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, திருச்சியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று உயிர் போகும் நிலையில் இருந்து மீண்டனர். 

கடந்த ஆண்டுகளில் டெங்கு கொசுக்கள் உற்பத்தி அதிகம் உள்ள பகுதிகளான முத்துநகர் ஆரம்ப துணை சுகாதார நிலையம், உழவர் சந்தை, துறைமங்கலத்தில் உள்ள நகர்ப்புற சுகாதார நிலையம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் தயாரித்து வழங்கப்பட்டது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் பெரம்பலூரில் முத்துநகர் சுகாதார துணை மையத்தில் டாக்டர் அல்லது செவிலியர்களை நிரந்தரமாக பணியில் அமர்த்தி டெங்கு கொசுவினால்பொதுமக்கள் பாதிக்கப்படாமல் தடுக்க நிலவேம்பு கசாயத்தை வாரந்தோறும் இருமுறை இப்பகுதிகளில் உள்ள வீடுகள்தோறும் வினியோகம் செய்யவேண்டும் என்று பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

Next Story