இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 5 பேர் விடுதலை
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
கோட்டைப்பட்டினம்,
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 18-ந் தேதி 200 விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விஜயேந்திரன் (வயது 48) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், அவரும், அதே ஊரை சேர்ந்த ராமு (49), ராம்குமார் (37), ஜேசு (39), கணேசன் (32) ஆகியோர் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
இந்நிலையில் அந்த 5 பேரும் இந்திய எல்லையான நெடுந்தீவு அருகே 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்தனர். மேலும் விசைப்படகையும் சிறைபிடித்து சென்றனர். மீனவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின், இலங்கையில் உள்ள ஊர்க்காவல்படை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, 5 மீனவர்களையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து 5 மீனவர்களும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஊர்க்காவல்படை நீதிமன்ற நீதிபதி யூட்சன் 5 மீனவர் களையும் நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார்.மேலும் விசைப்படகினை பெறுவதற்கு அனைத்து ஆவணங்களுடன் விசைப்படகின் உரிமையாளர் வருகிற நவம்பர் 26-ந் தேதி ஆஜராகவேண்டும், தவறும் பட்சத்தில் படகு அரசுடைமையாக்கப்படும் என உத்தரவிட்டார். இதனால் விடுதலை செய்யப்பட்ட 5 மீனவர்களும் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக மீனவர்கள் 5 பேர் விடுதலை செய்யப்பட்ட செய்தி மீனவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story