மழை பாதிப்பு தொடர்பாக மத்திய அரசுக்கு அனுப்பிய கர்நாடகத்தின் அறிக்கை நிராகரிப்பு? முதல்-மந்திரி எடியூரப்பா விளக்கம்


மழை பாதிப்பு தொடர்பாக மத்திய அரசுக்கு அனுப்பிய கர்நாடகத்தின் அறிக்கை நிராகரிப்பு? முதல்-மந்திரி எடியூரப்பா விளக்கம்
x
தினத்தந்தி 5 Oct 2019 4:30 AM IST (Updated: 4 Oct 2019 10:55 PM IST)
t-max-icont-min-icon

மாநில அரசு வழங்கிய அறிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பா விளக்கம் அளித்துள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கடந்த ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.

கர்நாடக அரசின் அறிக்கையை...

இதுதொடர்பாக ரூ.38 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மாநிலத்தில் மழையால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தின் மொத்த மதிப்பு குறித்தும், நிவாரண பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் இழப்பு மூலமாக ரூ.3,500 கோடி நிதி வழங்க வேண்டும் என்று கோரியும் மத்திய அரசுக்கு கர்நாடக அரசு அறிக்கை அளித்திருந்தது. அதே நேரத்தில் கர்நாடகத்தில் மழை பாதிப்புகள் குறித்து மத்திய குழு கர்நாடகத்தில் ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை அளித்திருந்தது.

ஆனால் மழை பாதிப்பு குறித்து கர்நாடக அரசு வழங்கிய நஷ்டத்தின் மதிப்பும், மத்திய குழு வழங்கிய நஷ்ட மதிப்பும் முரண்பட்டு இருப்பதாக கூறி, கர்நாடக அரசு வழங்கிய அறிக்கையை மத்திய உள்துறை நிராகரித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கர்நாடகத்திற்கு நிவாரணம் வழங்குவதில் மேலும் காலதாமதம் ஆகும் என்று எதிர்க் கட்சிகள் குற்றச்சாட்டு கூறியுள்ளன. இதுகுறித்து பெலகாவியில் நேற்று முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

நிராகரிக்கவில்லை

மாநிலத்தில் மழை பாதிப்புகள் மற்றும் நஷ்டத்தின் மதிப்பு குறித்து மத்திய அரசுக்கு அளித்திருந்த அறிக்கையிலும், மத்திய குழு ஆய்வு செய்து வழங்கி இருந்த அறிக்கையிலும் சில முரண்பாடுகள் இருந்துள்ளது. இதுதொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படி மாநில அரசிடம், மத்திய உள்துறை அதிகாரிகள் கேட்டு இருந்தனர். அதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அதிகாரிகளை சந்தித்து விளக்கம் அளித்து உள்ளனர். ஆனால் கர்நாடக அரசு வழங்கிய அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்கவில்லை. அதுதொடர்பாக வரும் தகவல்கள் உண்மை இல்லை.

கர்நாடகத்திற்கு நிவாரணம் வழங்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இன்னும் 3 அல்லது 4 நாட்களில் மத்திய அரசு நிவாரணம் வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மழை பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரிடம் நானே உரிய விளக்கம் அளித்துள்ளேன். நிவாரணமும் கேட்டுள்ளேன். மத்திய அரசு நிவாரணம் வழங்காது என்று பரவும் செய்திகளை மக்கள் காதில் வாங்கி கொள்ள வேண்டாம்.

எதிர்க்கட்சிகளின் கனவு பலிக்காது

கர்நாடகம் தவிர மேலும் 8 மாநிலங்களில் பெரிய அளவில் மழை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த மாநிலங்களுக்கும் மத்திய அரசு நிவாரணம் வழங்கவில்லை. ஆனால் கர்நாடகத்திற்கு மழை பாதிப்புக்கான நிவாரண நிதி வழங்குவதுடன், சிறப்பு நிதி வழங்கும்படியும் மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். கர்நாடகத்திற்கு மத்திய அரசு கூடுதலான நிவாரண நிதி வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு வேண்டும் என்றே காலதாமதம் செய்யவில்லை. விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்பதால் நிவாரணம் வழங்க தாமதமாகி இருக்கிறது.

மாநில அரசு முயன்றவரை மழை பாதித்த மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது. கர்நாடக சட்டசபைக்கு மீண்டும் தேர்தல் நடைபெற வாய்ப்பே இல்லை. எனது தலைமையிலான பா.ஜனதா அரசு கவிழ்ந்து விடும் என்று எதிர்க்கட்சிகள் பகல்கனவு காண்கின்றன. அந்த கனவு பலிக்காது. இந்த அரசு மீதமுள்ள ஆண்டுகளையும் முழுமையாக நிறைவு செய்யும். இடைத்தேர்தலுக்கு முன்பாக கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெறும் என்று தேவேகவுடா கூறி இருப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதுபோன்ற சூழ்நிலை தற்போது மாநிலத்தில் இல்லை.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story