முத்ரா திட்டத்தின்கீழ் ரூ.350 கோடி கடன் வழங்க இலக்கு - கலெக்டர் வீரராகவ ராவ் தகவல்


முத்ரா திட்டத்தின்கீழ் ரூ.350 கோடி கடன் வழங்க இலக்கு - கலெக்டர் வீரராகவ ராவ் தகவல்
x
தினத்தந்தி 4 Oct 2019 10:45 PM GMT (Updated: 4 Oct 2019 6:24 PM GMT)

முத்ரா திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.350 கோடி கடனுதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்புடன் மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் பொதுத்துறை, தனியார் மற்றும் கூட்டுறவுத்துறை சார்ந்த வங்கிகளை ஒருங்கிணைத்து கடனுதவி வழங்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலெக்டர் வீரராகவ ராவ் 700 பேருக்கு ரூ.13 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.

அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:- பொதுமக்களின் வளமான வாழ்விற்கு பொருளாதாரம் மிகவும் இன்றியமையாததாகும். அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட முன்னோடி வங்கி ஒருங்கிணைப்பில் பொதுத்துறை, தனியார் துறை மற்றும் கூட்டுறவுத்துறை சார்ந்த 25 வங்கிகள் பங்கேற்கும் வகையில் மாபெரும் சேவை கரம் நீட்டும் முகாம் நடத்தப்பட்டு பொது மக்களுக்கு கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன.

குறிப்பாக வீட்டுக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன், விவசாயக்கடன், சுய உதவிக்குழு கடன் மற்றும் முத்ரா கடன் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன. இம் முகாமில் ஏறத்தாழ 700 பயனாளிகளுக்கு ரூ.13 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுதவிர இம்முகாமில் புதிய வங்கி கணக்கு தொடங்குதல், ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு போன்ற பல்வேறு திட்டங்களுக்கு பதிவு செய்தல், கடனுதவி மற்றும் பல்வேறு வைப்புத்தொகை திட்டங்களின் கீழ் பயன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தல் போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அரசு மானியத்துடன் கூடிய கடன் உதவிகள் வழங்கும் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.

பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல சிறு, குறு வியாபாரிகள் பயன்பெறும் வகையில் முத்ரா கடன் உதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முத்ரா கடனுதவி திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் ரூ.350 கோடி மதிப்பில் கடன் உதவிகள் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இதுதவிர மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.350 கோடி அளவில் கடனுதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஏறத்தாழ 2 கோடி அளவில் பனை மரங்கள் உள்ளன. அதன்படி பனை மரம் சார்ந்த சிறு தொழில்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஏறத்தாழ ரூ.50 லட்சம் மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மீனவர்கள் பயன்பெறும் வகையில் மீன்பிடி சார்ந்த சிறு தொழில்களுக்கு கடன் உதவிகள் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாவட்ட கூடுதல் கலெக்டர் மற்றும் திட்ட இயக்குனர் பிரதீப் குமார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பொது மேலாளர் கேதார்நாத், தூத்துக்குடி முதன்மை மண்டல மேலாளர் விஸ்வநாதன், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் குருநாதன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்தன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story