புழுதிபட்டி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வலியுறுத்தல்


புழுதிபட்டி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 Oct 2019 11:00 PM GMT (Updated: 4 Oct 2019 7:05 PM GMT)

புழுதிபட்டி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க நோயாளிகள், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

எஸ்.புதூர்,

சிங்கம்புணரி அருகே உள்ள எஸ்.புதூர் ஒன்றியத்திற்குட்பட்டது புழுதிபட்டி கிராமம். இங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என்று அழைக்கப்படும் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் எஸ்.புதூர், புழுதிபட்டி மற்றும் அதை சுற்றி உள்ள பிரான்பட்டி, செட்டிகுறிச்சி, தர்மபட்டி, குன்னத்தூர், கணபதிபட்டி, கே.புதுப்பட்டி, கரிசல்பட்டி, வலசைபட்டி, முசுண்டபட்டி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர்.

இதுதவிர ஏராளமான கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக இங்கு வருகின்றனர். இந்த ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் மருத்துவ சேவை நடைபெற்று வந்தது. இதனால் தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இவ்வாறு சிறப்பு பெற்ற இந்த ஆஸ்பத்திரியில் கடந்த 1 வருடமாக போதிய டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இங்கு 2 டாக்டர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில் ஒரு டாக்டர் மட்டும் பணியில் உள்ளார்.

அவரும் மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்த பின்னரே பணி முடிந்து செல்லும் நிலை இருந்து வருகிறது. மேலும் இங்கு 6 நர்சுகள் இருக்க வேண்டிய இடத்தில், தற்போது 4 பேர் மட்டுமே பணியில் இருந்து வருகின்றனர். அவர்களும் பணிச்சுமையால் அவதியடைந்து வருகின்றனர். இதே போல் லேப்டெக்னீசியன் ஒருவர் மட்டும் பணியாற்றி வருகிறார். இவர் புழுதிபட்டி மற்றும் எஸ்.புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 2 இடங்களில் பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது.

இதனால் இந்த மருத்துவமனைக்கு ஸ்கேன் எடுக்க வரும் நோயாளிகள் அதிக நேரம் காத்து கிடக்கும் நிலையில் அவர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். தற்போது மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதியிலும் மழை காலம் தொடங்கி உள்ளதால் தொற்று நோய்களான காய்ச்சல், மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்கள் வேகமாக பரவ கூடும்.

இதனால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் கிசிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கூடுதல் டாக்டர்கள் மற்றும் நர்சுகளை நியமனம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story