கர்நாடக ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் கைது; பெங்களூரு அழைத்து வந்து விசாரணை


கர்நாடக ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் கைது; பெங்களூரு அழைத்து வந்து விசாரணை
x
தினத்தந்தி 5 Oct 2019 4:00 AM IST (Updated: 5 Oct 2019 12:36 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடக ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரை பெங்களூரு அழைத்து வந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில், மனைவியை பிரித்ததால் அவர் தனது மாமனாரை பழிவாங்க மிரட்டல் விடுத்தது தெரியவந்து உள்ளது.

வெடிகுண்டு மிரட்டல்

பெங்களூருவில் உள்ள கர்நாடக ஐகோர்ட்டுக்கு கடந்த மாதம்(செப்டம்பர்) 17-ந் தேதி வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் ஒன்று வந்தது. அதாவது கர்நாடக ஐகோர்ட்டு தலைமை பதிவாளருக்கு டெல்லியை சேர்ந்த ஹர்தர்ஷன் சிங் நாக்பால் என்பவரின் பெயரில் கடிதம் வந்தது.

இந்த கடிதத்தில், ‘நான் சர்வதேச காலிஸ்தான் ஆதரவு குழுவை சேர்ந்தவன். செப்டம்பர் மாதம் 30-ந் தேதி கர்நாடக ஐகோர்ட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெடிகுண்டுகள் வெடிக்க உள்ளது. இந்த வெடிகுண்டை நானும் எனது மகனும் சேர்ந்து வைக்க இருக்கிறோம். அடிக்கடி எனது இருப்பிடத்தை ஒவ்வொரு மாநிலமாக மாற்றுவதோடு, செல்போன் எண்ணை மாற்றுகிறேன். என்னை பிடிக்க முயற்சிக்க வேண்டாம்‘ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

டெல்லியில் விசாரணை

இதனால் அதிர்ச்சி அடைந்த கர்நாடக ஐகோர்ட்டு பதிவாளர் சம்பவம் பற்றி ஐகோர்ட்டு பாதுகாப்பு பிரிவு அதிகாரிக்கு தகவல் தெரிவித்ததோடு, விதானசவுதா போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் விதானசவுதா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர். கர்நாடக ஐகோர்ட்டு, விதானசவுதா, விகாசசவுதா உள்பட பெங்களூரு நகரில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை தீவிரமாக தேடிவந்தனர். முதற்கட்டமாக தனிப்படை போலீசார் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த டெல்லி மோடி நகரில் உள்ள சுதர்சன் காலனிக்கு சென்று ஹர்தர்ஷன் சிங் நாக்பாலை கண்டுபிடித்தனர். அவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

கைது

இந்த விசாரணையின்போது ஹர்தர்ஷன் சிங் நாக்பால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை என்று கூறினார். அத்துடன் தனது மருமகனான உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராஜேந்திர சிங் (வயது 36) வெடிகுண்டு மிரட்டல் விடுத்து தபால் மூலம் கடிதம் அனுப்பி இருக்கலாம் என்று அவர் சந்தேகம் தெரிவித்தார். மேலும் ராஜேந்திர சிங்கை பிடிக்க தனிப்படை போலீசார் முயன்றபோது, சென்னை ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக சென்னை போலீசார் அவரை ஏற்கனவே கைது செய்து இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் சென்னைக்கு சென்று ராஜேந்திர சிங்கை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டில் அனுமதி கேட்டு முறையிட்டனர். இதற்கு கோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து ராஜேந்திர சிங்கை தனிப்படை போலீசார் கைது செய்து பெங்களூருவுக்கு நேற்று அழைத்து வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மாமனாருக்கு பாடம் புகட்ட...

முதற்கட்ட விசாரணையில் ராஜேந்திர சிங், ஹர்தர்ஷன் சிங் நாக்பாலின் மகளை திருமணம் செய்து கொண்டுள்ளார். கணவன்-மனைவி இடையேயான தகராறை தொடர்ந்து ஹர்தர்ஷன் சிங் நாக்பால் தனது மகளை ராஜேந்திர சிங்கிடம் இருந்து பிரித்து அழைத்து சென்றுள்ளார்.

இதனால் கோபமடைந்த ராஜேந்திர சிங் தனது மாமனாரை பழிவாங்க ஹர்தர்ஷன் சிங் நாக்பால் பெயரில் சென்னை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 9 ஐகோர்ட்டு பதிவாளர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பியது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story