கர்நாடக அரசின் கஜானா காலியாக உள்ளது முதல்-மந்திரி எடியூரப்பா மகன் விஜயேந்திரா பேட்டி
கர்நாடக அரசின் கஜானா காலியாக இருப்பதாக முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா தெரிவித்தார்.
மைசூரு,
கர்நாடக அரசின் கஜானா காலியாக இருப்பதாக முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா தெரிவித்தார்.
எடியூரப்பா மகன் விஜயேந்திரா
மைசூரு மாவட்டம் வருணா தொகுதியில் பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகனும், மாநில பா.ஜனதா இளைஞர் அணி தலைவருமான விஜயேந்திரா கலந்துகொண்டு, நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசுகையில், வருணா தொகுதிக்கு வந்து நீண்ட நாட்கள் ஆகிறது. அதனால் உங்களை பார்ப்பதற்காக வந்துள்ளேன். மேலும் கட்சியை பலப்படுத்தும் பணியில் நீங்கள் ஈடுபட வேண்டும். வருணா தொகுதியில் நான் போட்டியிடுவேனா என்பது பற்றி கவலைப்பட வேண்டாம். அதுபற்றி தற்போது பேச வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு உங்களது ஆதரவு உள்ளது. அது மட்டும் எனக்கு போதும் என்றார். கடந்த ஆண்டு (2018) நடந்த சட்டசபை தேர்தலில் வருணா தொகுதியில் சித்தராமையா மகன் யதீந்திரா எம்.எல்.ஏ.வை எதிர்த்து போட்டியிட ஆர்வமாக இருந்தார். ஆனால் பா.ஜனதாவில் வாரிசுகளுக்கு இடம் கிடையாது என கூறி கட்சி மேலிடம் கடைசி நேரத்தில் விஜயேந்திராவுக்கு பதிலாக மாற்று வேட்பாளரை நிறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
கஜானா காலியாக இருக்கிறது
இந்த கூட்டம் முடிந்த பிறகு விஜயேந்திரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடக அரசின் கஜானா காலியாக இருக்கிறது. எப்படி காலியானது என்பதும், யார் காலியாக்கியது என்பதும் தெரியவில்லை. ஆனால் கஜானா காலியாக இருப்பது உண்மை.
அதுதொடர்பான கணக்குகள் என்னிடம் இல்லை. முந்தைய ஆட்சியாளர்கள் தான் இதற்கு காரணம். தற்போது கஜானாவில் நிதி இல்லாததால், முதல்-மந்திரி எடியூரப்பா வளர்ச்சிப் பணிகளை செய்ய முடியாமலும், மழையால் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள முடியாமலும் சிரமப்பட்டு வருகிறார். கஜானா காலியாக இருப்பதால் முதல்-மந்திரி கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆட்சி நடத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story