கோவை குண்டுவெடிப்பில் தொடர்புடைய 4 பேர் தூத்துக்குடியில் பதுங்கலா? நோட்டீஸ் வினியோகித்து சி.பி.சி.ஐ.டி. தேடுகிறது
கோவை குண்டுவெடிப்பில் தொடர்புடைய 4 பேர் தூத்துக்குடியில் பதுங்கி உள்ளனரா? என சி.பி.சி.ஐ.டி. போலீசார் நோட்டீஸ் வினியோகித்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி,
கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு குண்டுவெடிப்பு நடந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய சாதிக் என்ற ராஜா, அபுபக்கர் சித்திக், முஜிபுர் ரகுமான் என்ற முஜி, அயூப் என்ற அசரப் அலி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர்.
இந்த 4 பேரும் தூத்துக்குடி உள்ளிட்ட பிறமாவட்டங்களில் பதுங்கி இருக்கலாம் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதனால் அவர்களின் புகைப்படங்கள் அடங்கிய நோட்டீசை தூத்துக்குடி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் வினியோகித்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். ஒவ்வொருவரை பற்றியும் தகவல் தெரிவித்தால் தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.8 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று போலீசார் அறிவித்து உள்ளனர்.
இந்த நோட்டீசை மக்கள் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் போலீஸ் நிலையங்களிலும் ஒட்டி வருகின்றனர். மேலும், அவர்களை தேடும் வேட்டையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரப்படுத்தி உள்ளார்கள்.
Related Tags :
Next Story