போலி ஆவணங்கள் மூலம் இலங்கை அகதிகளுக்கு பாஸ்போர்ட்: அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிப்பு


போலி ஆவணங்கள் மூலம் இலங்கை அகதிகளுக்கு பாஸ்போர்ட்: அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 4 Oct 2019 9:30 PM GMT (Updated: 4 Oct 2019 7:47 PM GMT)

போலி ஆவணங்கள் மூலம் இலங்கை அகதிகளுக்கு பாஸ்போர்ட் எடுத்து கொடுத்த வழக்கில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை,

கோவை கணபதி புதூர் 3-வது வீதியை சேர்ந்தவர் ரகுபதி (வயது 48). இவர் கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 6-வது வீதியில் பாஸ்போர்ட் எடுத்து கொடுப்பது மற்றும் சுற்றுலா அழைத்து செல்லக்கூடிய டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவர் இலங்கை அகதிகளுக்கு போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் எடுத்து கொடுத்ததாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அவருடைய டிராவல்ஸ் அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு இலங்கை அகதிகள் குறித்த தகவல்கள் மற்றும் 2 அகதிகளின் பாஸ்போர்ட்டுகளும் இருந்தன. இதையடுத்து போலீசார் ரகுபதியை பிடித்து விசாரணை செய்ததில், இலங்கை அகதிகளுக்கு தமிழர்கள் என்று போலி ஆவணங்கள் தயாரித்து பாஸ்போர்ட் எடுத்து கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து போலீசார் விசாரணை செய்ததில், அகதிகளுக்கு பாஸ்போர்ட் எடுத்து கொடுத்ததில் அரசு அதிகாரிகள் பலருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்து உள்ளது.இதுகுறித்து கியூ பிரிவை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

கைதான ரகுபதி, கடந்த சில ஆண்டுகளாக பாஸ்போர்ட் எடுத்து கொடுக்கும் வேலையை செய்து வருகிறார். அப்போது இலங்கை அகதியை சேர்ந்த ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் தனக்கு பாஸ்போர்ட் எடுத்து கொடுத்தால் அதிகளவில் பணம் கொடுப்பதாக கூறி உள்ளார்.

எனவே அவர் பணத்துக்கு ஆசைப்பட்டு, அந்த நபருக்கு தமிழகத்தை சேர்ந்தவர் என்று போலி ஆவணங்கள் தயாரித்து ஆதார் கார்டு வாங்கி உள்ளார். அதன் மூலம் பாஸ்போர்ட்டு எடுத்து கொடுத்து உள்ளார். பின்னர் அந்த நபர் மூலம் ஏராளமான இலங்கை அகதிகளுக்கு பாஸ்போர்ட் எடுத்து கொடுத்துள்ளார். அதன் மூலம் ரகுபதி லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதித்து உள்ளார்.

இதற்கிடையில் போலி ஆவணங்கள் தயாரிக்க ரகுபதிக்கு சில அரசு அதிகாரிகள் உதவி உள்ளனர். அவர்கள் யார்? அதற்காக எவ்வளவு பணம் பெற்றனர்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.அத்துடன் அவர்களுக்கு ஆதார் கார்டு பெற எங்கு விண்ணப்பித்தனர், அந்த ஆவணங்களை வாங்கியவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் ரகுபதியை காவலில் எடுத்து விசாரித்தால்தான் முழு தகவலும் கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story