கூடலூர், கெத்தையில், காட்டுயானைகள் அட்டகாசம் - வீடுகள், தபால் நிலையம், மருந்தகம் சேதம்
கூடலூர், கெத்தையில் காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. இதில் வீடுகள், தபால் நிலையம், மருந்தகம் சேதம் அடைந்தது.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுயானைகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவை விவசாய பயிர்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் ஒருசில நேரங்களில் மனித-காட்டுயானை மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்கிறது. காட்டுயானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனாலும் காட்டுயானைகளின் அட்டகாசம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் கூடலூர் ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்டது லாரஸ்டன். இங்கு தனியார் தேயிலை எஸ்டேட் நிர்வாகத்துக்கு சொந்தமான கட்டிடத்தில் தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகில் மருந்தகம், குடோன்கள், குடியிருப்புகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு குட்டியுடன் 9 காட்டுயானைகள் அப்பகுதியில் புகுந்தன.
பின்னர் அந்த காட்டுயானைகள் அங்குள்ள நூலகத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்தன. மேலும் அங்கிருந்த மேசை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை துதிக்கையால் தூக்கி வீசியும், உடைத்தும் அட்டகாசம் செய்தன. இதற்கிடையில் நூலகத்தின் அருகில் உள்ள மருந்தகத்துக்குள் கதவை உடைத்து குட்டியானை புகுந்தது. பின்னர் அங்கிருந்த மருந்து பொருட்கள் மற்றும் தளவாடங்களை சேதப்படுத்தியது. மேலும் மருந்தகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை காட்டுயானைகள் துதிக்கையால் உடைத்து சேதப்படுத்தின. இரவு முழுவதும் அப்பகுதியில் அட்டகாசம் செய்த காட்டுயானைகள், அதிகாலையில் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றன.
இதுகுறித்து வனத்துறையினருக்கு நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். அப்போது காட்டுயானைகளின் அட்டகாசத்தை தடுக்கவும், தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதேபோன்று கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பாடந்தொரை அருகே உள்ள வட்டக்கொல்லி சுண்டவயல் பகுதியில் கிருஷ்ணன் என்பவரது வீட்டை காட்டுயானைகள் இடித்து சேதப்படுத்தின. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். மேலும் சேதம் அடைந்த வீட்டுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மஞ்சூர் அருகே கெத்தை மின்வாரிய குடியிருப்பில் 5 காட்டுயானைகள் புகுந்தன. அதில் ஒரு காட்டுயானை, அங்குள்ள ஆய்வு மாளிகையின் கதவை உடைத்து உள்ளே சென்றது. பின்னர் அங்கிருந்த பீரோ, மேசை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை துதிக்கையால் சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. மேலும் ஆய்வு மாளிகையின் வெளியே வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியையும் உடைத்தது.
பின்னர் அதே பகுதியில் மின் ஊழியர் ரஜினிகாந்த் என்பவரது வீட்டின் கதவை காட்டுயானை உடைத்தது. சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து எழுந்த அவர், காட்டுயானையை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பாதுகாப்பான இடத்துக்கு ஓடி சென்று, அங்கிருந்து அக்கம்பக்கத்தினருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். உடனே அங்கு விரைந்து வந்த அவர்கள் பட்டாசு வெடித்து காட்டுயானையை விரட்டியடித்தனர். இதுகுறித்து குந்தா வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர், பிற காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story